கிருஷ்ணகிரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்

கிருஷ்ணகிரி, ஜூன் 13: கிருஷ்ணகிரியில் நகரில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன. கிருஷ்ணகிரி நகரில், போக்குவரத்து அதிகம் உள்ள 5 ரோடு ரவுண்டானா முதல் லண்டன்பேட்டை பிஎஸ்என்எல் ரவுண்டானா வரை, சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அந்த கடைகளை, ஜூன் 12ம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும் என சம்மந்தப்பட்டவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. நேற்று காலை, கிருஷ்ணகிரி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் கவிதா தலைமையில், உதவி பொறியாளர் அன்பரசன், நகர அமைப்பு அலுவலர் சாந்தி மற்றும் நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தொடங்கினர்.

அப்போது பேனர்கள், தற்காலிக கடைகள் அகற்றப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாததால், பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினருக்கும், ஆக்கிரமிப்பாளர்கள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பெங்களூரு சாலை, கே.தியேட்டர் சாலைகளில் உள்ள பெரிய நிறுவனங்கள் சாலையையும், சாக்கடை கால்வாயையும் ஆக்கிரமித்து, சிமெண்ட் தரை அமைத்துள்ளனர்.

இதனை முழுமையாக நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் அகற்ற முன்வருவதில்லை. ஒவ்வொரு முறையும் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டி வருகின்றனர். பெரும்பாலும் ஜவுளி கடைகள், பெரிய அளவிலான அங்காடிகள் தான் சாலையை ஆக்கிரமித்து தங்களது விளம்பர பேனர்களை வைத்து போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, எவ்வித பாரபட்சமுமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,’ என்றனர்.

Related Stories: