ஓகி புயலில் சேதமடைந்த ஏர்வாடி அணைக்கரை-சிறுமளஞ்சி பாலத்தை சீரமைக்க வேண்டும்

ஏர்வாடி ஜூன் 7: ஏர்வாடியில் ஓகி புயலில் பெய்த கடும் மழையில் அடித்து செல்லப்பட்ட அணைக்கரை-சிறுமளஞ்சி இணைப்பு பாலத்தை மழைக்காலத்துக்கு முன் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள அணைக்கரை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களின் அடிப்படை ேதவைகளுக்காக  சிறுமளஞ்சிக்கு செல்ல வேண்டியுள்ளது. அங்கு தான் பஞ்சாயத்து அலுவலகமும் உள்ளது. இந்த இரு கிராமங்களையும் இணைக்கும் வகையில் நம்பியாற்றின் குறுக்கே தரைப்பாலம் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஓகி புயலால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அணைக்கரை-சிறுமளஞ்சி இணைப்பு பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் கிராம மக்கள் பாதிப்படைந்தனர். கடந்த டிச.4ம் தேதி பாலத்தை சீரமைக்க கோரி கிராம மக்கள் ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர்.

நாங்குநேரி தாசில்தார்  தலைமையில் அரசு அதிகாரிகள்  அணைக்கரைக்கு பேருந்து வசதி, முதியோர் உதவித்தொகை, ரேஷன் பொருட்கள் ஊருக்குள் வழங்க ஏற்பாடு செய்வதாகவும், உடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கப்படும் என உறுதியளித்தனர்.  ஆனால் 10 நாட்கள் மட்டுமே அரசு பேரூந்து ஊருக்குள் வந்து பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்றது. அதன்பிறகு பஸ் எதுவும் வரவில்லை. முதியோர் உதவித்தொகை, ரேசன்கடையும் திறக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆற்றைக் கடப்பதற்கு பனைமரத்தை தற்காலிக பாலமாக அமைத்து ஆபத்தான நிலையில்  சென்று வந்தனர். இப்பகுதியை மத்திய குழுவினரும், மனித உரிமை ஆணையம் சிறப்பு தூதர் சைலஜாவும் பார்வையிட்டு சென்றனர். எனினும்  அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமலும் காலம் கடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாங்குநேரி எம்எல்ஏ நிதியில் இருந்து ரூ.1.5 லட்சம் செலவில் தற்காலிக இரும்பு பாலம் போடப்பட்டது. அடுத்து வந்த கனமழையில் அதுவும் அடித்து செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால்  இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

அணைக்கரை பகுதியைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சிறுமளஞ்சி பள்ளியில் படிக்கின்றனர். பாலம் உடைந்ததால் இவர்கள் தினமும் ஆற்றின் குறுக்கே நடந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். வெளியூருக்கு தொழில் மற்றும்  வேலைக்கு செல்பவர்களும், கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளும் ஆற்றை கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகள், மழை காலத்திற்கு முன்னதாக  பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: