×

ஏக்கல்நத்தம் கிராமத்தில் சாலை வசதியின்றி உயிர்ப்பலி அதிகரிப்பு

வேப்பனஹள்ளி மே 22:  வேப்பனஹள்ளி அருகே ஏக்கல்நத்தம் கிராமத்தில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி உயிர்ப்பலிகள் தொடருவதாக சட்ட விழிப்புணர்வு முகாமில் பொதுமக்கள் நீதிபதிகளிடம் தெரிவித்தனர். வேப்பனஹள்ளி அருகே நாரலப்பள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட மலை கிராமம் ஏக்கல்நத்தம். இங்கு, சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு இதுவரை சாலை வசதி செய்து தரப்படவில்லை. இதனால், கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகளை தொட்டில் கட்டி 10 கி.மீ., தூரமுள்ள  மேகலசின்னம்பள்ளியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்து வருகின்றனர். உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாததால் நோயாளிகள் பலர் வழியிலேயே இறந்து விடுகின்றனர். மேலும், அத்தியாவசிய பொருட்களையும் அடிவாரத்தில் உள்ள சக்னாவூர் கிராமத்திற்கு வந்து வாங்கிக் கொண்டு தலை சுமையாக மலைக்கிராமத்திற்கு செல்கின்றனர். இந்நிலையில், தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி வேண்டி கடந்த இரண்டு முறை நடந்த மக்களவைத் தேர்தலை இக்கிராம மக்கள் புறக்கணித்தனர்.

இதனிடையே, நேற்று ஏக்கல்நத்தம் மலை கிராமத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் மாவட்ட சிறப்பு நீதிபதி அறிவொளி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி தஸ்னீம் ஆகியோர் கலந்து கொண்டனர். இம்முகாமில், பேசிய கிராம மக்கள் சாலை வசதி இல்லாததால் உயிர்பலி தொடர்ந்து வருகிறது.  எனவே, சாலை வசதிக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதைத்தொடர்ந்து பேசிய வனச்சரக அலுவலர் நாகேஷ், சாலை அமைக்கும் பணிகளுக்கான ஆயத்தப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. விரைவில் சாலை அமைக்கப்படும் என்றார்.
முகாமில் சுவார்டு தொண்டு நிறுவன தலைவர் ராமமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரசன்ன வெங்கடேசன், பாலாஜி, வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் சக்தி, போலீஸ் எஸ்ஐ சண்முகம், தொண்டு நிறுவனத்தினர் வெங்கடராமன், ஜலாலுத்தீன், ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.

Tags : village ,Ekknatham ,roads ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...