ரயில்வே துறை அதிகாரிகள் அடாவடியால் மேம்பால பணிகள் மீண்டும் முடங்கும் அபாயம்: மணலி மக்கள் வேதனை

திருவொற்றியூர்: ரயில்வே துறை அதிகாரிகள் அடாவடியால் மணலி சாலையில் மேம்பால பணிகள் மீண்டும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.  திருவொற்றியூரில் இருந்து பேசின் சாலை வழியாக எம்ஜிஆர் நகரை கடந்து மணலி, மாதவரம் மற்றும் மீஞ்சூர் போன்ற பகுதிகளுக்கு மணலி சாலை செல்கிறது. தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்துவதால், போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. இந்த சாலையில் பக்கிங்காம் கால்வாய் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேம்பாலம் பழுதடைந்து, வலுவிழந்துள்ளது. எனவே, இதை அகற்றிவிட்டு, புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.  இதையடுத்து பக்கிங்காம் கால்வாய் குறுக்கே ₹42 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பணிகள் துவங்கப்பட்டது.

Advertising
Advertising

இந்த பணிகள் கடந்த 2018 டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள்  முடிந்திருக்க வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களால் இதுவரை முடிக்கப்படாமல் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதனால், பழைய மேம்பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் பாதுகாப்பற்ற முறையிலும், நெரிசலிலும் சிக்கி தவிக்கின்றன.   இதுகுறித்து ‘தினகரன்’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து மேம்பால பணியை துரிதப்படுத்த நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. இதற்காக கடந்த 15ம் தேதி  திருவொற்றியூர் பேசின் சாலையிலிருந்து பழைய மேம்பாலம் வழியாக மணலிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக மேம்பால பணி நடைபெறும் இடத்தில் இருந்து கார்கில் நகர் பக்கிங்காம் கால்வாய் ஓரம் வாகனங்கள் செல்லும்படி மாற்றுப் பாதை ஏற்படுத்தப்பட்டது.

இதற்காக சுமார் ₹3.5 கோடி செலவில்,  சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நீளத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டது. பின்னர், பழைய பாலம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் புதிய  மேம்பாலத்துக்கான தூண்கள் அமைக்க ராட்சத இயந்திரங்களும் கொண்டு வரப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன. இந்நிலையில், போக்குவரத்திற்கு மாற்று பாதையாக போடப்பட்ட சாலையின் ஒரு பகுதி ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் செல்வதால் ரயில்வே துறை அதிகாரிகள் இந்த மாற்று பாதையில் வாகனம் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகளுக்கும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்  இந்த மாற்றுப்பாதையில்  வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு, ரயில்வே அதிகாரிகள் சாலையில் பள்ளம் தோண்டியதோடு, சாலையின் குறுக்கே ராட்சத தடுப்புகளையும் அமைத்தனர். இதனால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேசின் சாலையிலிருந்து கால்வாய் வழியாக மணலி செல்லும் பாதையை மீண்டும் போக்குவரத்திற்காக திறந்துவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ரயில்வே துறை அதிகாரிகளின் இந்த செயல்பாடு காரணமாக மேம்பால பணி மீண்டும் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  எனவே உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னை மாவட்ட  ஆட்சியர்  இப்பிரச்சனையில் தலையிட்டு புதிய மேம்பால பணியை துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: