திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.டி.சீதாபதி காலமானார்: மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை:  திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.டி.சீதாபதி நேற்று காலமானார். அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.சி.,யுமான ஆர்.டி.சீதாபதி (82), சென்னை சூளையில் உள்ள இல்லத்தில் நேற்று காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்ததும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று சீதாபதியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரது உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும், திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்எல்ஏ, ரவிச்சந்திரன் எம்எல்ஏ உள்ளிட்ட திமுக முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் சீதாபதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மறைந்த சீதாபதியின் இறுதி சடங்கு இன்று நடக்கிறது.

Advertising
Advertising

ஆர்.டி.சீதாபதி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: திமுகவின் சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவரும், ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட முன்னாள்  செயலாளருமான ஆர்.டி.சீதாபதி மறைவுச் செய்தி, என் இதயத்தில் வேதனை தீயை மூட்டியிருக்கிறது. திமுக கொள்கை குன்றாக, தியாகத்தின் மறு உருவமாக, உழைப்பில் ஓய்வறியா தேனீயாக கழக பணியாற்றியவரை இன்றைக்கு இழந்து தவிக்கிறேன். 1974ம் ஆண்டு தொடங்கி, தொடர்ந்து இருமுறை சென்னை மாவட்ட செயலாளராக ஆர்.டி.சீதாபதி பொறுப்பேற்று திமுகவின் வளர்ச்சிக்கு அரணாக விளங்கியவர். எப்படிப்பட்ட அடக்குமுறைகளையும் எதிர்த்து நின்று திமுக கூட்டங்களை, பேரணிகளை, தலைமை கழகம் அறிவிக்கும் போராட்டங்களை நடத்தி, திமுக வளர்ச்சியில் சென்னையில் மிக முக்கியமான இடத்தை பிடித்தவர்.

இந்திய குடியரசு தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத், பிரதமர் நேரு ஆகியோருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தி  சென்னை மத்திய சிறையிலும் பாளையங்கோட்டை சிறையிலும் ஓராண்டு காலம் மிசா சிறைவாசம் அனுபவித்தவர். 2012ம் ஆண்டு கலைஞர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட ஆர்.டி.சீதாபதியின் மறைவு, அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பேரிழப்பு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: