ஓமலூரில் தனியார் பள்ளிகளின் 137 வாகனங்கள் ஆண்டாய்வு

ஓமலூர், மே 15: ஓமலூரில் நேற்று தனியார் பள்ளிகளின் 137 வாகனங்கள் ஆண்டாய்வு செய்யப்பட்டது. இதில் குறைபாடுகளுடன் இருந்த 10 பேருந்துகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சரகதிற்கு உட்பட்ட பகுதிகளில், சுமார் 30க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த பள்ளிகள் சார்பில் 239 பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மாவட்டம்தோறும் ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளின் வாகனங்கள் ஆண்டாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஓமலூரில் முதற்கட்டமாக 137 பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டது.

ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் நடந்த முகாமில், தனியார் பள்ளி பஸ்கள் இயக்குவதற்கு தகுதியாக உள்ளதா என்று மேட்டூர் ஆர்டிஓ  லலிதா தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இதில் டி.எஸ்.பி சரவணன் முன்னிலையில், சேலம் மேற்கு மண்டல மோட்டார் வாகன அலுவலர் தாமோதரன், ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் அனைத்து பேருந்துகளை ஆய்வு செய்தனர்.

இதில், தீ தடுப்பு உபகரணம், பிரேக், டயர்கள், அவரசவழி, முதல் உதவி சிகிச்சை உபகரணங்கள், பேருந்தின் தரைகள், படிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில்  பல்வேறு குறைபாடுகளுடன் இருந்த 10 பேருந்துகளை தகுதி நீக்கம் செய்தனர்.  மேலும் ஓட்டுனர் உரிமம், ஓட்டுனர் அனுபவங்கள், பேருந்துகளின் உரிய ஆவனங்கள், பராமரிப்புகள் உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்தனர்.

மேலும் பஸ் ஓட்டுனர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விழிப்புணர்வு கையேடும் வழங்கப்பட்டது.  ஓமலூர் சரகத்தில் கடந்தாண்டு விபத்து இல்லாமல் ஓட்டிய பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கு பாராட்டு தெரிவித்த ஆர்டிஓ  லலிதா, வரும் ஆண்டிலும் விபத்தில்லாமல் வாகனத்தை இயக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

Related Stories: