திசையன்விளையில் கல்வி நிறுவன வாகனம் மோதி சிறுவன் பலி பள்ளி முதல்வரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்

திசையன்விளை, ஏப். 28:  திசையன்விளையில் கல்வி நிறுவன வாகனம் மோதி சிறுவன் பலியான சம்பவத்தில் பள்ளி முதல்வரை கண்டித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். வள்ளியூர் தெப்பக்குளத் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். வெல்டிங் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள். இவர்களில் மூத்த மகன் ஜன் (11), வள்ளியூரில் உள்ள ஒரு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். கோடை விடுமுறையை கொண்டாட  திசையன்விளையில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்த ஜன், நேற்று முன்தினம் மதியம்  தனது நண்பர்களுடன் உவரி- நாங்குநேரி பைபாஸ் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக  திசையன்விளை தனியார் மெட்ரிக் பள்ளி முதல்வர் வந்த கார், சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஜனை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு சிறுவன் இறந்தான். இதுகுறித்து வழக்குப் பதிந்த இன்ஸ்பெக்டர் ஜூடி, கார் டிரைவரான சுவாமிதாஸ்நகரை சேர்ந்த சேகர் மகன் சரண்ராஜை (25) கைது செய்தார்.

 இறந்த சிறுவன் ஜன் 3ம் வகுப்பு வரை திசையன்விளையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பயின்றது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தை கண்டித்து ஜனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திசையன்விளை- நாங்குநேரி சாலையில் எம்ஜிஆர் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று காலை திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் விவசாய அணி மாநில செயலாளர் வேல்முருகன், நகரத் தலைவர் ராஜன், மாவட்ட துணைத்தலைவர் விஜயபெருமாள், தேமுதிக நகரச் செயலாளர் நடேஷ் அரவிந்த், அமமுக இளைஞர் அணி நகரச் செயலாளர் லிங்கராஜ், காங்கிரஸ் விவசாய அணி நிர்வாகி விவேக் முருகன், ஒருங்கிணைந்த வியாபாரிகள் சங்கத் தலைவர் சாந்தகுமார், மாவட்ட துணைத்தலைவர் விஜயபெருமாள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து விரைந்து வந்த திசையன்விளை தாசில்தார் ஆவுடைநாயகம், இன்ஸ்பெக்டர் ஜூடி, எஸ்ஐக்கள் மகேந்திரன், ஐயப்பன், முருகன் மற்றும் ஆர்.ஐ. கிறிஸ்டி தவச்செல்வி, விஏஓக்கள் திசையன்விளை செல்வக்குமார், இட்டமொழி குமார், முதுமொத்தம்மொழி இசக்கியப்பன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதை ஏற்க மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 51 பேரை போலீசார் கைதுசெய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். இருப்பினும் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் திசையன்விளையில் பரபரப்பு நிலவியது.

உறவினர்கள் குமுறல்

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் கூறுகையில்,  ‘‘ராதாபுரம், திசையன்விளை பகுதியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் நெல்லைக்கு  சென்றுவிட்ட நிலையில் விபத்தில் சிக்கிய எங்கள் மகன் ஜனை நெல்லை  மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. சைக்கிள் மீது மோதிய  பள்ளி முதல்வரின் காரில் கூட அவனை சிகிச்சைக்காக நெல்லைக்கு விரைவாக கொண்டு  சென்றிருந்தால் அவன் உயிர் பிழைத்திருப்பான். ஆனால் சிறிதும் கூட  மனிதாபிமானம்  இல்லாமல் அவர், நிற்காமல் சென்றுள்ளார். ஜன், அவர்களது  பள்ளியில் தானே படித்தான். அதைக்கூட அவர்கள் நினைக்கவில்லையே’’ என்று  குமுறினர். மேலும் இதுவிஷயத்தில் பள்ளி நிர்வாகி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.

Related Stories: