விருதுநகரில் சொத்துவரி கட்டாத கடைகளுக்கு சீல் நகராட்சி ஆணையர் அதிரடி

விருதுநகர், ஏப். 24: விருதுநகரில் சொத்து மற்றும் குடிநீர் வரி கட்டாத கடைகள், திருமண மண்டபங்களை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கை தொடங்கியதுள்ளது. நகராட்சி ஆணையரின் அதிரடி நடவடிக்கையால், 83 நாட்களில் ரூ.9 கோடி வரிபாக்கி வசூலாகி உள்ளது. விருதுநகர் நகராட்சிக்கு சொத்து மற்றும் குடிநீர் வரியாக வரவேண்டிய தொகை சுமார் ரூ.13.50 கோடி நிலுவை இருந்தது. கடந்த ஜன.30ல் நகராட்சி புதிய ஆணையராக பார்த்தசாரதி பொறுப்பேற்ற போது நகராட்சி ஊழியர்கள், அலுவலர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலை இருந்தது. இதனால், நகராட்சிக்கு வரவேண்டிய சொத்து வரி, குடிநீர் வரியை வசூலிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினார். நகரில் சொத்து மற்றும் குடிநீர் வரி செலுத்தாத வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு துண்டித்தல், திருமண மண்டபங்களை பூட்டி சீல் வைத்தல் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால், 83 நாட்களில் ரூ.9 கோடி வரிபாக்கி வசூலாகி உள்ளது. இந்நிலையில், நேற்று சொத்து வரி கட்டாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

காசுக்கடை பஜாரில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான 7 கடைகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக வரிபாக்கி ரூ.51,660 நிலுவையில் உள்ளது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரிபாக்கி செலுத்தப்படவில்லை. கடந்த மாதம் சக்திவேல் வரிக்காக கொடுத்த காசோலை பணம் இன்றி திரும்பி வந்தது. இதை தொடர்ந்து ஆணையர் பார்த்தசாரதி தலைமையில் அலுவலர்கள் சக்திவேலின் கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இது குறித்து ஆணையர் பார்த்தசாரதி கூறுகையில், ‘நகரில் சொத்து வரி, குடிநீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள வரியினங்களை உடனடியாக செலுத்த தவறுவோரிடம் இருந்து உரிய நடவடிக்கை எடுத்து வசூலிக்கப்படும்‘ என்றார்.

Related Stories: