நிலங்களில் மழைநீரை நிலைநிறுத்த கோடை உழவு அவசியம் சிவகாசி வேளாண்மை அதிகாரி அட்வைஸ்

சிவகாசி, ஏப். 24: நிலங்களில் மழைநீரை நிலைநிறுத்த விவசாயிகள் கோடை உழவு அவசியம் செய்ய வேண்டும் என சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வனஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: சிவகாசி வட்டாரத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த மழைநீரை சரியாக பயன்படுத்த, விவசாயிகள் கோடை உழவு பணிகளை தொடங்க வேண்டும். இப்போது கோடை உழவு செய்ய வேண்டியது மிக அவசியம். கோடை உழவால் மழைநீர் முழுவதும் நிலை நிறுத்தப்படுகிறது. பருவ காலத்தில் பயிரிடப்படும் பயிர் வறட்சியை தாங்கி வளரும். களைகளும் கட்டுப்படுத்தப்படும். பூச்சி, பூஞ்சாணங்கள் அழிக்கப்படும். குறிப்பாக பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் மண்ணில் உள்ளதால், கோடை உழவு செய்யும்பொழுது சூரிய வெப்பத்தினால் அழிக்கப்படுவதுடன், பறவைகளுக்கும் பூச்சிகள் இரையாகி, பெருக்கம் தடுக்கப்படும். மேலும், கோடை உழவு செய்யும்பொழுது சரிவுக்கு குறுக்காக 5 பல் கலப்பை கொண்டு உழவு செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை கோடை மழை பெய்த பின்பும், கோடை உழவு செய்து விவசாயிகள் பயனடைய வேண்டும். மேலும், விபரங்களுக்கு சிவகாசி வேளாண்மை அலுவலகத்தை விவசாயிகள் தொடர்பு கொண்டு பயன் பெற்றுக்கொள்ளவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: