திருநின்றவூர் பேருராட்சியில் சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீர்: தொற்றுநோய் பரவும் அபாயம்

ஆவடி:  திருநின்றவூர் பேரூராட்சியில் கோமதிபுரம், பெரியகாலனி, ராமதாசபுரம், கன்னிகாபுரம், சுதேசி நகர், முத்தமிழ் நகர், திருவேங்கடநகர், பெரியார் நகர், அந்தோணி, தாசர்புரம், லட்சுமிபுரம், கிருஷ்ணாபுரம், வச்சலாபுரம், முருகேசன் நகர், லலிதாஞ்சலி நகர், பிரகாஷ் நகர், சாந்தி நகர், ஐ.ஒ.வி நகர், இந்திராநகர், பாலகிருஷ்ணா நகர், வசந்தம் நகர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் உள்ளன. இங்குள்ள 18 வார்டுகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சென்னை மற்றும் ஒட்டியுள்ள பல பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் உள்ளது. ஆனால் திருநின்றவூர் பேரூராட்சியில் இல்லை. இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பேரூராட்சியில் உள்ள பல குடியிருப்புகளில் கழிவுநீர் தொட்டிகள் (செப்டிக் டேங்க்) முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொட்டிகள் பல வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் முறையான அளவில் வடிவமைப்பு செய்யவதில்லை. இதனால் தொட்டியில் கழிவுநீர் அடிக்கடி நிறைந்து விடுகிறது. இதனால் தொட்டிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி முக்கிய சாலைகள், தெருக்களில் ஆறாக ஓடுகிறது.

Advertising
Advertising

     மேலும், சிறிய குடியிருப்புகளில் கழிவுநீர் தொட்டி அமைக்க இடம்  போதுமானதாக இல்லை. இதனை அடுத்து, அத்தகைய குடியிருப்புவாசிகள் சாலை ஓரத்தில் சிறிய  அளவில் உறை கிணறு கூடிய கழிவுநீர் தொட்டி  அமைக்கக்கின்றனர்.  இதிலிருந்து தான் நாள்தோறும் அதிக அளவில் கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்கிறது. மேலும், மேற்கண்ட பகுதியில் திறந்து கிடக்கும் கழிவுநீர் தொட்டிகளில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் கடிப்பதால், அப்பகுதி மக்களுக்கு  மலேரியா, டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பரவி வருகின்றன.  அதோடு மட்டுமல்லாமல், சாலைகளில் தேங்கியுள்ள கழிவு நீரில் நடந்து செல்பவர்கள், கால்களில் சேற்று புண்கள், தோல் நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால் கழிவுநீர் தெளித்து பாதசாரிகள் மீது விழுந்து உடைகள் பாழாகி வருகின்றன. திருநின்றவூர், சி.டி.எச் சாலை, பஜாரில் வீடுகள் முன்பு உள்ள தொட்டிகளில் தேங்கி நிற்கும் கழிவு நீர் குடிநீரில் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரை சமையலுக்கு பயன்படுத்திட முடியவில்லை.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘பேரூராட்சி கழிவுநீர் அகற்றும் ஊர்தி இருந்தும் மக்களுக்கு பயன் இல்லை. ஏனென்றால், கழிவுநீரை ஊற்ற இடம் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.இதனால், கழிவுநீர் ஊர்தி காட்சி பொருளாகவே உள்ளது. இதனால், தனியார் வாகனங்கள் கழிவுநீரை அகற்ற அதிக கட்டணத்தை வசூலிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இனி மேலானது தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான பாண்டியராஜன் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்து மக்களின் நீண்டகால கனவை நிறைவேற்ற வேண்டும்,’ என்றனர்.

Related Stories: