திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி குப்பையை உருவாக்குபவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு: விரைவில் அமலுக்கு வருகிறது

சென்னை: திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி குப்பையை உருவாக்குபவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஓராண்டுக்கு ₹60 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்களும், 200 வார்டுகளும் உள்ளன. இவற்றிலிருந்து நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பை  பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் கொட்டப்படுகிறது. இதைத் தவிர்த்து 9, 10 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் பணி தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 8 மண்டலங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகளை உருவாக்கியது. இந்த விதிகளின்படி உள்ளாட்சி அமைப்புகள் குப்பைகளை உருவாக்குபவர்களிடம் இருந்து கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.  இதன்படி சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
Advertising
Advertising

இதற்கான துணை விதிகள் மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி 500 சதுர அடி பரப்பளவு கொண்டு வீடுகளுக்கு ஒரு மாதத்திற்கு ₹10ம், 501 முதல் 1200 சதுர அடி வரை உள்ள வீடுகளுக்கு ஒரு மாதத்திற்கு ₹25ம், 1201 முதல் 2500 சதுர அடி வரை உள்ள வீடுகளுக்கு ஒரு மாதத்திற்கு ₹50ம், 2401 சதுர அடிக்கு மேல் உள்ள வீடுகளுக்கு ஒரு  மாதத்திற்கு  ₹1000ம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 1000 கிலோவிற்குள் குப்பைகளை உருவாக்கும் திருமண மண்டபங்களுக்கு ஒரு மாதத்திற்கு ₹5 ஆயிரமும், 1000 கிலோவிற்கு மேல் குப்பைகளை உருவாக்கும் திருமண மண்டபங்களுக்கு ஒரு மாதத்திற்கு ₹7500ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் சமூக நலக்கூடங்கள் ஒரு மாதத்திற்கு ₹1000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்று ஆயிரம் கிலோவிற்குள் குப்பைகளை உருவாக்கும் நட்சத்திர விடுதிகளுக்கு மாதம் ஒன்றுக்கு ₹3 ஆயிரமும், ஆயிரம் கிலோவிற்கு மேல் குப்பைகளை  உருவாக்கும் நட்சத்திர விடுதிகள் ₹5 ஆயிரமும் கட்டணமாக செலுத்த வேண்டும். நட்சத்திர விடுதிகள் இல்லாத உணவகங்கள் ஆயிரம் கிலோவிற்கு மேல் குப்பைகளை உருவாக்கினால் ₹3 ஆயிரமும், ஆயிரம் கிலோவிற்கு கீழ் உருவாக்கினால் ₹1000ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

‘ஏ’ வகுப்பு சினிமா தியேட்டர்கள் ஒரு திரைக்கு ₹2 ஆயிரமும், கூடுதலாக உள்ள ஒவ்வொரு திரைக்கும் ₹1000 கட்டணமாக செலுத்த வேண்டும். ‘பி’ வகுப்பு சினிமா தியேட்டர்கள் திரை ஒன்றுக்கு ₹1500ம், கூடுதல் திரைகளுக்கு ₹750ம் செலுத்த வேண்டும். அரசு அலுவலகங்கள் ₹300 முதல் 300 வரையிலும், தொழில் உரிமம் பெற்ற பல்வேறு கடைகள் ₹200 முதல் ₹1000 வரையிலும் செலுத்த வேண்டும்.   பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ₹5 ஆயிரம் முதல் ₹20 ஆயிரம் வரையிலும், மருத்துவமனை மற்றும் நர்சிங் ேஹாம்களுக்கு ₹2 ஆயிரம் முதல் ₹4 ஆயிரம் வரையிலும், தனியார் பள்ளிகளுக்கு ₹500 முதல் ₹3000 ஆயிரம் வரையிலும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டவுடன் இந்த துணை விதிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி பார்த்தால் ஜூலை மாதம் முதல் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: