பம்மல் நகராட்சியில் மாட்டு தொழுவமாக மாறிய சாலை

தடுமாறி விழும் வாகன ஓட்டிகள், கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பல்லாவரம்: பம்மல் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து சிலர் மாட்டுத் தொழுவமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் கண்டும், காணாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட நல்லதம்பி சாலை, முனுசாமி தெருவில் சிலர் சாலையை ஆக்கிரமித்து எருமை மாடுகளை கட்டி வைத்துள்ளனர். இந்த மாடுகளின் கழிவுகள் சாலையிலேயே குவித்து வைக்கப்படுவதால் மாட்டு தொழுவமாக காட்சியளிக்கிறது.

இதனால் இந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வயோதிகர்கள் மற்றும் சிறுவர்கள் இந்த சாலையில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோர், மாடுகளின் கழிவுகளால் தடுமாறி விழுந்து செல்கின்றனர்.

அதுமட்டுமின்றி, சாலையில் கட்டி வைக்கப்பட்டுள்ள மாடுகள் திடீரென பொதுமக்கள் மீது பாய்வதால், பீதியுடன் கடந்து செல்கின்றனர்.

கால்நடைகளின் கழிவுகள் அதே பகுதியில் நாள் கணக்கில் குவித்து வைக்கப்பட்டுள்ளதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கொசுக்கள் மற்றும் ஈக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, அருகில் வசிக்கும் மக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மாடுகளை வளர்ப்பவர்கள் அதற்கு முறையாக கொட்டகை அமைக்காமல், சாலையிலேயே கட்டி வைத்துள்ளனர். அவற்றின் கழிவுகளையும் அருகிலேயே குவித்து வைத்துள்ளனர்.

இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த மாடுகள் தெருவில் அங்கும் இங்கும் நடமாடுவதால், அப்பகுதியை கடந்து செல்ல சிரமமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் மாடு முட்டி எங்கே விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் செல்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன், இதே பம்மல் நல்லதம்பி சாலையில், மாடுகள் கட்டி வைக்கப்படும் இடத்தின் அருகே, தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற மாணவி ஆலியா என்பவர் விபத்தில் சிக்கி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி நகராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, சாலையை ஆக்கிரமித்து, கட்டப்பட்டுள்ள மாடுகளை அப்புறப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: