தாம்பரம் பகுதியில் குடிநீர் வசதி இல்லாத அரசு அலுவலகங்கள்: பொதுமக்கள் தவிப்பு

தாம்பரம்: தாம்பரம் பகுதியில் உள்ள நகராட்சி, தாலுகா, ஆர்.டி.ஓ., மற்றும் உணவு வழங்கல் துறை உள்ளிட்ட அலுவலகங்களில் குடிநீர் வசதி இல்லாததால் மனுக்களுடன் வரும் பொதுமக்கள் குடிநீரை தேடி அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தாம்பரத்தில் நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. தாம்பரம் தொகுதியின்  பல்வேறு பகுதிகளிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்கு மேற்கண்ட அலுவலகங்களுக்கு வருகின்றனர். ஆனால், இந்த அலுவலகங்களில் பொதுமக்களுக்கான எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. குறிப்பாக, அத்தியாவசிய தேவையான குடிநீர் மற்றும் கழிவறை வசதி இல்லை. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, பெண்கள், வயதானவர்கள் சிரமப்படும் நிலை உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்டவற்றில் பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் வசதி கூட செய்து தரப்படாததது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றில் பல ஆண்டுகளாக குடிநீர் வருவதில்லை. அதிகாரிகள் ஒவ்வொருவரும் அவர்களது அறையில் தண்ணீர் கேன் வைத்திருக்கின்றனர். அவசரத்திற்கு, அதிகாரிகளின் அறைகளில் உள்ள தண்ணீர் கேனில் இருந்து தண்ணீர் குடிக்க எடுத்துக்கொள்ளலாமா என பொதுமக்கள் கேட்டால், இது எங்களுக்கானது. இதை வெளிஆட்களுக்கு தரமுடியாது, என கூறி விரட்டியடிக்கின்றனர். கழிவறை வசதி இல்லாததால், இயற்கை உபாதைகளை கழிக்க திறந்வெளியை தேடும் நிலை உள்ளது. அருகில் பொது கழிப்பறைகள் கூட இல்லாதது வேதனையான விசயம். தாம்பரம் தொகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: