அண்ணா நகர் பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு: போலீசார் திணறல்

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகரில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சென்னை அண்ணாநகர் எல்.பிளாக் 1வது பிரதான சாலையை சேர்ந்தவர் சத்திய நாராயணன் (65). இவர் பெரம்பூரில் பைக் ஷோரும் வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர், குடும்பத்துடன் ஊருக்கு சென்ற நேரத்தில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை, ரூ.1 லட்சம் மற்றும் விலையுயர்ந்த கை கடிகாரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதே பகுதியில் வசித்து வரும் முரளி கிருஷ்ணன் (40) என்பவரின் வீட்டு கதவை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுபோல், சமீப காலமாக பல்வேறு இடங்களில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து வருவதுடன், ஆங்காங்கே வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்று வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கொள்ளையடிக்கும் நபர்கள், தெருவில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் திருடி சென்றுவிடுகின்றனர். சிலர் சேதப்படுத்தி விடுகின்றனர். இதனால் கொள்ளையர்கள் உருவம் பதிவாவது இல்லை. இதனால், குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சென்னை நகர் முழுவதும் பல கோடி ரூபாய் செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அண்ணாநகர் பகுதியிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி இருந்தும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Related Stories: