வாக்குப்பதிவு இயந்திரத்தை சுத்தியலால் அடித்த முதியவர்... தண்டையார்பேட்டையில் பரபரப்பு

பெரம்பூர்: தண்டையார்பேட்டையில் வாக்களிக்க வந்த முதியவர், மறைத்து வைத்திருந்த சுத்தியலால் வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை தாண்டவராயன் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி எண் 164ல் நேற்று மக்கள் ஆர்வமாக வாக்களித்து வந்தனர். இந்நிலையில் மாலை 5 மணி அளவில் 70 வயது மதிக்கத்தக்க  முதியவர் ஒருவர் தன் மகளுடன்  வாக்களிக்க வந்துள்ளார். இவர் வாக்களிக்கும் போது, தனது லுங்கியில் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து திடீரென வாக்குப்பதிவு இயந்திரத்தை  அடித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தேர்தல் பணியாளர்கள், அவரை பிடித்து தண்டையார்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர் தண்டையார்பேட்டையை சேர்ந்த ஆசைத்தம்பி (72) என்பதும், லேசாக மனநிலை  பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிந்தது. முதியோரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்தகவலறிந்து திமுக மற்றும் அமமுக கட்சியினர் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றக்கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். தேர்தல் அதிகாரி அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை பரிசோதனை செய்து பார்த்து, இயந்திரம் சரியாக செயல்படுகிறது என தெரிவித்தார். ஆனால் திமுக மற்றும் அமமுக கட்சியினர் இந்த இயந்திரம் சரியாக உள்ளது என எழுத்து மூலம் எழுதிக் கொடுத்தால் மட்டுமே வாக்களிக்க சம்மதிப்போம், இல்லையெனில் மாற்றுங்கள் என கேட்டதின் பேரில் தேர்தல் அதிகாரி அந்த வாக்கு இயந்திரம் பழுதடையவில்லை சரியாக உள்ளது என எழுதி கொடுத்தார். இதையடுத்து, வாக்குப்பதிவு நடைபெற்றது.

Related Stories: