வாக்களித்துவிட்டு வந்து சாப்பிட்டால் ஓட்டல்களில் 50 சதவீதம் தள்ளுபடி: இன்று முதல் 21ம் தேதி வரை சலுகை

சென்னை: வாக்களித்து விட்டு வந்து உணவு சாப்பிட்டால் இன்று முதல் 21ம் தேதி வரை ஓட்டல்களில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று சில ஓட்டல்கள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

 

இந்நிலையில் வாக்களிப்பை வலியுறுத்தி சலுகைகளை வழங்குவதாக சில ஓட்டல்கள் அறிவித்துள்ளன. அதாவது, வாக்களித்து விட்டு வந்து உணவு சாப்பிட்டால் பில் தொகையில் 50 சதவீதம் வரையில் அதிரடி தள்ளுபடி அறிவித்துள்ளனர். சென்னையில் ஏராளமான ஓட்டல்களில் இந்த சலுகை வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு ஓட்டலின் முன்பு விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து தனியார் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் அபூபக்கர் கூறுகையில், ‘‘இந்தியாவில் தேர்தலின்போது வாக்குப்பதிவு 65 முதல் 75 சதவீதம் மட்டுமே உள்ளது. ஆனால் வெளிநாட்டில் வாக்குப்பதிவு 90 சதவீதத்தை தாண்டுகிறது. எனவே உண்மையான ஜனநாயகம் மலர அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டியது அவசியம் ஆகும். எனவே, வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் எங்கள் ஓட்டலில் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் 50 சதவீத தள்ளுபடி விலையில் உணவுகளை வழங்க முடிவு செய்துள்ளோம். வாக்களித்ததன் அடையாளமாக ஆட்காட்டி விரலின் மையை காட்டினால் போதும். 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஓட்டலுக்கு வரலாம். ஒவ்வொரு முறை உணவு அருந்தும் போதும் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்’’ என்றார்.

Related Stories: