திருமங்கலம், ஏப்.10: திருமங்கலம் அருகே டூவீலரில் தூங்கியதால் ஏற்பட்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் மாரிமுத்து(18). இவரது அக்கா முத்துபேச்சியும், மைத்துனர் செல்வகந்தசாமியும் திருப்பூரில் குடியேற முடிவு செய்தனர்.
இதற்காக முத்துபேச்சியும் உறவினர்களும் லாரியில் பாத்திரங்களை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் சென்றனர். மாரிமுத்துவும், செல்வகந்தசாமியும் மட்டும் டூவீலரில் வள்ளியூரிலிருந்து திருப்பூருக்கு கிளம்பினர். நேற்று அதிகாலை 4 மணிக்கு திருமங்கலம் கரிசல்பட்டி பாலத்தில் இவர்கள் சென்றபோது மாரிமுத்து வண்டி ஓட்டியபடி தூங்கிவிட்டார். இதனால் டூவீலர் நிலைதடுமாறி பாலத்தில் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட மாரிமுத்து, செல்வகந்தசாமி இருவரும் படுகாயமடைந்தனர். அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே மாரிமுத்து உயிரிழந்தார்.