சிசிடிவி கேமரா, செல்போன் எண் மூலம் கொலையாளிகளை தேடும் பணி தீவிரம்: வீடு புகுந்து தாய், மகன் கொலை வழக்கில்

சென்னை: திருத்தணியில் வீடு புகுந்து தாய், மகனை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் தனிப்படை அமைத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் செல்போன் அழைப்பு பதிவுகளை ஆய்வு செய்து,  கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வனப்பெருமாள் (50). இவர்,     திருத்தணி-அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் செக்யூரிட்டி சூபர்வைசராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதி  பி.ஜி.புதூர், பாலாஜி நகரில் தனது மனைவி விஜி (எ) வீரலட்சுமி (45), மகன் போத்திராஜா (13) ஆகியோருடன் வசித்து வந்தார்.இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு வழக்கம்போல் வனப்பெருமாள் வேலைக்கு சென்றுவிட்டு 9ம் தேதி காலை வீடு திரும்பினார். அப்போது மனைவி வீரலட்சுமி, மகன் போத்திராஜா ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில்  சடலமாக கிடந்தனர். வீரலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் நகை, பீரோவில் இருந்த 22 சவரன் நகை என மொத்தம் 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

தாய் மற்றும் மகனை அடித்துக் கொன்றுவிட்டு நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்ற தகவலறிந்து, மாவட்ட எஸ்பி பொன்னி, டிஎஸ்பி சேகர், திருத்தணி இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் சம்பவ இடம் வந்து  விசாரித்தனர். ஆனால் கொலையாளிகள் குறித்த எந்த துப்பும் கிடைக்கவில்லை.இந்நிலையில் டிஎஸ்பி சேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் முருகன், ரமேஷ், ஜெயராமன் ஆகியோர் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி  கேமரா பதிவு மற்றும் செல்போன் டவர்களில் பதிவான எண்களை பெற்று கொலையாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: