சிவகாசி மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கோலாகலம் ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபாடு

சிவகாசி, ஏப். 8: சிவகாசியில், மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.சிவகாசியில் இந்து நாடார் உறவின்முறை மகமை பண்டுக்கு சொந்தமான புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அம்மன் சிம்ம வாகனம், காமதேனு வாகனம், வேதாள வாகனம், ரிசப வாகனம் உட்பட பல்வேறு வாகனங்களில் தினசரி வீதியுலா வந்தார்.8ம் நாள் திருவிழாவான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். ஏராளமானோர் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாதாரதனை, அலங்காரம் நடந்தது. அம்மன் குதிரை வாகனத்தில் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான 9ம் நாள் திருவிழாவான கயர்குத்து விழா இன்று நடக்கிறது.

இந்த விழாவில், சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி ஏந்தி வந்து அம்மனை வணங்குவர். அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி வலம் வந்து அரிசிக் கொட்டகை மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதனையொட்டி சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவர். 10ம் திருவிழாவில் தேர் வடம் தொடுதலும், தேர் இழுத்தல் நடைபெறும். கடைசி திருவிழாவிற்கு மறுநாள் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார் உறவின்முறை மகமை பண்டு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: