பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து குமரியில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் தோவாளை, வடசேரி, திங்கள்சந்தையில் பேசுகிறார்

நாகர்கோவில், ஏப்.3 :  மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குமரி மாவட்டத்தில் இன்று பிரசாரம் செய்கிறார். தோவாளை, வடசேரி, திங்கள்சந்தையில் பேசுகிறார்.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக இன்று (3ம்தேதி) அவர் குமரி மாவட்டம் வருகிறார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ. வேட்பாளரும், மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதல்வர் பிரசாரம் செய்கிறார். இரவு 7.30க்கு தோவாளையில் இருந்து பிரசாரத்தை தொடங்கும், அவர் வடசேரி, திங்கள்சந்தை ஆகிய இடங்களில் திறந்த வேனில் இருந்தவாறு பேசுகிறார். இரவு கன்னியாகுமரியில் தங்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை (4ம்தேதி) காலை காரில் நெல்லை புறப்பட்டு செல்கிறார். இன்று மதியம் தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொள்ளும் அவர், அங்கிருந்து கூடங்குளம் வழியாக காவல்கிணறு வந்து பின்னர் நான்கு வழிச்சாலை வழியாக தோவாளை வந்தடைகிறார்.

ஆரல்வாய்மொழியில் பாலப்பணிகள் நடப்பதால், முதல்வர் பிரசாரம் தோவாளையில் திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. முதலமைச்சர் பிரசாரத்தை தொடர்ந்து இன்று மாலையில் இருந்து நாகர்கோவில் - திருநெல்வேலி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. திருநெல்வேலி மார்க்கங்களுக்கு செல்ல வேண்டிய பஸ்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் வெள்ளமடத்தில் இருந்து செண்பகராமன்புதூர் வழியாக ஆரல்வாய்மொழி செல்லும் என தெரிகிறது. முதலமைச்சர் செல்லும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. எஸ்.பி. நாத் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். முதல்வர் தங்கும் கன்னியாகுமரி ஓட்டலிலும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. முதலமைச்சர் வருகைக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் அசோகன், ஜாண் தங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் செய்து வருகிறார்கள்.

Related Stories: