வழக்கு விசாரணையின்போது கத்திக்குத்து சம்பவம் நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: சென்னை, உயர் நீதிமன்ற வளாகத்தில் 8 குடும்ப நல நீதிமன்றங்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்கு, ஜீவனாம்சம் என குடும்ப பிரச்னை தொடர்பான பல்வேறு வழக்குகள் விசாரணை நடைபெறும். நேற்று முன்தினம் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு வந்த ஒருவர், தனது மனைவியை நீதிபதி கண் முன்னே கத்தியால் குத்தினார். இது, பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த கத்திக்குத்து சம்பவத்தின் எதிரொலியால் நேற்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மெட்டல் டிடெக்டர் இயந்திரம் பொருத்தப்பட்டது. அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களின் கடும் சோதனைக்கு பிறகே வழக்கு உள்ளவர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். அடையாள அட்டை இல்லாத பணியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு ஆஜராகி, கீழமை நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு குறைவாக உள்ளதால், பல்வேறு பிரச்னைகள் நடக்கிறது. எனவே நீதிமன்ற வளாகத்தை சிஐஎஸ்எப் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என முறையிட்டார். இதைக்கேட்ட நீதிபதி, பதிவாளரிடம் மனு அளிக்க உத்தரவிட்டார்.

Related Stories: