பூந்தமல்லி அருகே பரபரப்பு வேனில் எடுத்து வந்த 1.4 கோடி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி

சென்னை: பூந்தமல்லி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் வேனில் எடுத்து வரப்பட்ட ரூ.1.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை அருகே செக்போஸ்ட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.அப்போது, அடையாறில் இருந்து பெரும்புதூருக்கு சென்ற வேனை மடக்கி சோதனையிட்டனர்.

Advertising
Advertising

அதில் ரூ.1.4 கோடி பணம் இருந்தது. வேனில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள், வங்கி ஊழியர் விஜயகாந்த், டிரைவர் அன்பு மற்றும் 2 பாதுகாவலர்கள் என்பதும், சென்னை அடையாறில் உள்ள தனியார் வங்கியில் இருந்து பெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப எடுத்து செல்லப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, பணத்துக்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்டனர். உரிய ஆவணங்கள் இல்லாததால், பணம் பறிமுதல் செய்யப்பட்டு பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.இதற்கிடையில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணங்களை காட்டி பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: