தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதையடுத்து தேர்தல் ஆணைய உத்தரவுப்படி மாவட்ட வாரியாக பறக்கும் படைகள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பதற்றம் மற்றும் மிக பதற்றமான வாக்குச்சாவடிகளை கணக்கெடுத்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதியில் துணை ராணுவ படையினருடன் மாவட்ட வாரியாக கொடி அணிவகுப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் டிஜிபிக்கள், கூடுதல் டிஜிபிக்கள், கமிஷனர்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள் மற்றும் அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களுடன் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, அரசியல் கட்சிகள் கொடுக்கும் தேர்தல் புகார்களை பெறுவது மற்றும் புகாரின் கீழ் நடவடிக்கை எடுப்பது எப்படி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுப்பது எப்படி என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், மாவட்ட வாரியாக தேர்தல் புகார்கள் குறித்து அனைத்து மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து டிஜிபி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டதாகவும், 2 மணி நேரத்திற்கு மேல் நடந்த கூட்டத்தில் பாதுகாப்பு தொடர்பாக பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: