பூந்தமல்லி சிறைக்கு மேல் பச்சை விளக்குடன் பறந்த மர்ம பொருள்

சென்னை, மார்ச் 14: பூந்தமல்லி சிறைக்கு மேல், அதிகாலையில் பச்சை விளக்குடன் மர்ம பொருள் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த பூந்தமல்லி கரையான்சாவடி பகுதியில் கிளைச் சிறை அமைந்துள்ளது. இதன், அருகிலேயே வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், சிஆர்பிஎப் போலீஸ் முகாம் ஆகியவை உள்ளன. இந்த பகுதியில் 24 மணி நேரமும் சிஆர்பிஎப் போலீசார் ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கிளைச் சிறை அமைந்துள்ள பகுதியில் தினமும் 2 ஷிப்டுகளில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சிறையை சுற்றி 6 இடங்களில் உயரமான டவர் அமைக்கப்பட்டு அதன் மீது துப்பாக்கி ஏந்திய போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணி அளவில் பச்சை விளக்கு எரிந்தபடி மர்ம பொருள் ஒன்று பூந்தமல்லி டிரங்க் சாலை பகுதியிலிருந்து சிறையை நோக்கி பறந்து வந்தது.

இது,  சிறைப்  பகுதியை வட்டமடித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து மறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இளதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்துள்ளனர். ஆனால், ஒரு சில வினாடிகளுக்குள் அந்தப் பொருள் பறந்து மறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடனடியாக அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், பூந்தமல்லி போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதிகாலை வேளையில் மர்ம நபர்கள் யாராவது ட்ரோன் வகை விமானத்தில் கேமராக்கள் மூலம் உளவு பார்த்தனரா அல்லது வேறு ஏதாவதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். கடுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ள பகுதியில் மர்ம பொருள் பறந்து வந்தது  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: