பயன்பாட்டில் உள்ள தரமான சாலைகளை உடைத்து மீண்டும் அமைக்க முயற்சி அம்பை நகராட்சி அலுவலகம் முற்றுகை

அம்பை, மார்ச் 12:   அம்பை நகராட்சிக்கு உட்பட்ட ஆற்றுச்சாலை காசிநாதர் கோயில் வழியாக கல்லிடைக்குறிச்சிக்கு செல்லும்  சிமென்ட் சாலை உள்ளிட்ட நகராட்சி பகுதியின் பல்வேறு இடங்களில் உள்ள தரமான சாலைகள் போக்குவரத்து பயன்பாட்டில் இருந்துவருகின்றன.  சாலைகள் போட்டு சில ஆண்டுகள் ஆன நிலையில் அதில் எந்தவிதப் பழுதும் இல்லை. இந்நிலையில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்.18ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பயன்பாட்டில் இருந்து வரும் தரமான சாலைகள் அனைத்தையும் உடைத்து புதிய சாலை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் சட்டவிரோத செயலை நிறுத்த வேண்டும். தினமும் மாசில்லா சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். இரவில் சரிவர எரியாத சாலை விளக்குகள் அனைத்தையும் சரிசெய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் சுகாதாரமின்றி பாதிப்படைந்துள்ள மரகதாம்பிகை நகரில் கழிவுநீரோடை அமைக்க வேண்டும். அங்கு நடைபெற உள்ள விரிவாக்கப்பணியின் போது நூற்றாண்டுகளை கடந்த மரங்கள் மற்றும் குடிநீர் குழாய்களை சேதமடையாது பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சியினர் மற்றும் மரகதாம்பிகை நகர் நிர்வாகிகள் உள்ளிட்டோர் அம்பை நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். போராட்டத்திற்கு திமுக நகரச் செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தனர்.

நகராட்சி அலுவலக வளாகத்தில் நூற்றுக்கணக்கோனோர் திரண்டுவந்தபோதும் ஆணையாளர் அங்கு இல்லை. தகவலறிந்து விரைந்துவந்த நகராட்சி பணி மேற்பார்வையாளர் சரவணன், சுகாதார மேற்பார்வையாளர் சிதம்பர ராமலிங்கம் உள்ளிட்டோர் போராட்டக்குழுவினரை சமரசப்படுத்தினர். அப்போது கோரிக்கை மனுவை நகர்மன்ற முன்னாள் தலைவரும், திமுக நகரச் செயலாளரும் பிரபாகரன் வழங்கினார். அப்போது பேசிய அதிகாரிகள், ஆணையாளர் வந்ததும் உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.  இதை ஏற்றுக்கொண்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர். போராட்டத்தில் திமுக நிர்வாகிகள் கோவிந்தராஜ், ராமையா, சரவணநாதன், ராஜேந்திரன், ரமேஷ்  சதன்துரை, அண்ணாத்துரை, பிச்சையா, அமானுல்லாகான், தமாகா அந்தோணிசாமி, மூமுக துரைப்பாண்டி, மதிமுக முத்துச்சாமி, சிவகுருநாதன், இந்திய கம்யூ. வடிவேலு, ராமமூர்த்தி,  மார்க்சிஸ்ட் சுடலைமணி, ஜெகதீஸ், வியாபாரிகள் சங்க தலைவர் காந்தி, செயலாளர் கார்த்திகேயன், மரகதாம்பிகை நகர் குடியிருப்போர் நகச்சங்க நிர்வாகிகள் கணபதிராமன், சண்முகவேல், பாலகிருஷ்ணன், பழனி உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories: