தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர், செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

தேன்கனிக்கோட்டை, மார்ச் 6:தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால், நோயாளிகள் அவதியுறுகின்றனர். தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில், 62 படுக்கைகளுடன் கூடிய அனைத்து வசதிகளும் உள்ளது. ஆனால் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள் இல்லை. 13 மருத்துவர் பணியிடங்கள் உள்ள நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக 5 மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மீதமுள்ள மருத்துவர்கள் ஒசூர், கிருஷ்ணகிரிக்கு மாற்று பணிக்கு அனுப்பப்படுகிறார்கள். மேலும், 24 செவிலியர்களுக்கு பதிலாக 11 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். 13 பேர் ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை பகுதிக்கு மாற்று பணியில் அனுப்பப்பட்டுள்ளனர். இங்கு அஞ்செட்டி, தளி, கெலமங்கலம் உட்பட பகுதிகளில் இருந்து தினசரி 700 முதல் 900 வரை வெளிநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். 5 மருத்துவர்கள் மூலம் உரிய சிகிச்சை அளிக்க முடியாததால் ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பி வைக்கின்றனர்.

 இதனால் அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி போன்ற மலைப்பகுதிகளில் தொலை தூரத்தில் இருந்து வரும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும், ஆய்வத்திற்கு பணியாளர்கள் நியமிக்காததால் நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை செய்து உரிய சிகிச்சை பெறமுடியவில்லை. மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால், இங்கு பிரசவமும் குறைந்துள்ளது. மலை பகுதி கிராமங்கள் கொண்ட தாலுகா மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தும், மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. எனவே, மக்களின் நலன் கருதி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். இல்லையெனில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, இந்திய ஜனாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

Related Stories: