வி.கே.புரம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பணியிடம் நிரப்பப்படுமா?

வி.கே.புரம், பிப். 22:  வி.கே.புரம் நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தினமும் நூற்றுக்கணக்கான வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையில் நிரந்தமாக 2 டாக்டர்கள் பணி புரிய வேண்டும். ஆனால் தற்போது நிரந்தரமாக டாக்டர்கள் இல்லை.

இதன் காரணமாக அகஸ்தியர்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து நாள்தோறும் ஒரு டாக்டர் வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். தினமும் ஒரு டாக்டர் என மாறிமாறி வருவதால் தொடர் சிகிச்சை பெறும் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் வெளிநோயாளிகளுக்கு சீட்டு வழங்கிவரும் ஆண் உதவியாளர்தான் எதிர்பாராத விபத்துகளை சந்திக்கும் நோயாளிக்கு மருந்து கட்டும் பணியையும் செய்து வருகிறார். அந்நேரங்களில் வெளி நோயாளிகளுக்கு சீட்டு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரம் செயல்பட்டு வருகிறது. எனவே நிரந்தர டாக்டர்கள் பணியிடத்தையும், தேவையான உதவியாளர் பணியிடத்தையும் நிரப்ப வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: