விளம்பர பேனர்கள் விவகாரம் உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை: விளம்பர பேனர்கள் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை அரசியல் கட்சிகள் முறையாக  பின்பற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விளம்பர பேனர்கள் வைப்பது தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் டிஜிட்டல் பேனர் பிரிண்டிங் அச்சக சங்க உறுப்பினர்களுடனான கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், தலைமையில் நேற்று நடந்தது. இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், டிஜிட்டல் பேனர் பிரிண்டிங் சங்கம் மற்றும் சங்க உறுப்பினர்கள் விளம்பரப் பேனர்கள் அமைக்க உரிய படிவத்தை பூர்த்தி செய்து அனுமதி கோரும் நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தடையில்லா  சான்று, அமைக்கப்பட உள்ள இடம் தனியார் கட்டிடமாகவோ, அரசு நிறுவனம் சார்ந்த கட்டிடமாகவோ இருந்தால் அவர்களிடமிருந்து அதற்கான தடையில்லா சான்று, அமைக்கப்பட உள்ள இடத்திற்கான வரைபடம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பேனருக்கும் அனுமதி கட்டணமாக ரூ.200 மற்றும் காப்பீட்டுத் தொகை ரூ.50 செலுத்த வேண்டும்.

Advertising
Advertising

விதிகளுக்கு மீறி மற்றும் அனுமதி பெறாமல் பேனர் வைத்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பேனர்களின் கீழ்பகுதியில் அனுமதி அளிக்கப்பட்ட நாள், அனுமதி எண், அனுமதி அளிக்கப்பட்ட அளவின் விவரம் மற்றும் அனுமதி வழங்கப்பட்ட கால அவகாசம், அச்சகத்தின் பெயர் ஆகியவற்றை குறிப்பிடாமல் அச்சடிக்கும் அச்சகத்தின் உரிமத்தை ரத்து செய்யும் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் வைக்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே உயர் நீதிமன்ற உத்தரவை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். உத்தரவிற்கு எதிராக விளம்பரப் பேனர்கள் அமைப்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: