சென்னை விமான நிலையத்தில் குடிபோதையில் ஆசாமி ரகளை: வெளிநாட்டு பயணத்துக்கு வேட்டு

சென்னை: கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் ஜவகர் (39). சவுதி அரேபியாவின் தமாமில் வேலை செய்து வருகிறார். சென்னையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் மூலம் மும்பைக்கு சென்று அங்கிருந்து தமாம் செல்ல இருந்தார்.  நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தார். ஜெட் ஏர்வேஸ் கவுன்டரில் சென்று டிக்கெட்டை கொடுத்து போர்டிங் பாஸ் கேட்டார். அவர், போதையில் தள்ளாடியதை பார்த்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள், ‘நீங்கள் அதிகமான போதையில் இருக்கிறீர்கள், உங்களை பயணம் செய்ய அனுமதிக்க மாட்டோம்’’ என்று கூறி போர்டிங் பாஸ் கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

உடனே விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் வந்து விசாரித்தனர். அவர்களிடமும் ஜவகர், வாக்குவாதம் செய்து தகாத வார்த்தையால் பேசி, ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.  இதனால் பாதுகாப்பு அதிகாரிகளும், விமான நிலைய அதிகாரிகளும் அவரை பிடித்து, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போதை தெளியும் வரை விமான நிலையத்தில் இரவு முழுவதும் அமர வைத்தனர். நேற்று காலை ஜவகர், ‘‘தெரியாமல் செய்து விட்டேன், என்னை மன்னித்து  விடுங்கள்’’ என்று கூறினார். ஆனாலும் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டது தொடர்பான பிரிவுகளில் வழக்கு பதிந்து ஜாமீனில் அனுப்பினர். இனிமேல் வழக்கு முடியும் வரையில் ஜவகர் வெளிநாடு செல்ல முடியாது. இதையடுத்து அவர், கள்ளக்குறிச்சிக்கு திரும்பினார்.

Related Stories: