போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் வரிசை எண்ணுடன் கூடிய நோட்டீஸ் ஒட்டப்பட்டு பறிமுதல் செய்யப்படும், என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள், நடைபாதைகள் மற்றும் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  7 ஆயிரத்து 682 இருசக்கர வாகனங்கள், 90 மூன்று சக்கர வாகனங்கள், 103 நான்கு சக்கர வாகனங்கள்  என மொத்தம் 7 ஆயிரத்து 875 வாகனங்கள் காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டு ஏலம் விடப்பட்டது.  இதன் மூலம் ரூ.2.21 கோடி வருவாய் கிடைத்தது. இதில் சேவைக் கட்டணம் நீங்கலாக மீதம் உள்ள ரூ.2.13  கோடியில் சென்னையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிக்காக ரூ.1.60 வழங்கப்பட்டது.

 இரண்டாவது கட்டமாக 1,510 இருசக்கர வாகனங்கள், 51 மூன்று சக்கர வாகனங்கள், 13 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் இதுவரை  1,574 வாகனங்கள் காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.   விரைவில்  இந்த வாகனங்களும் ஏலம் விடப்படும்.  இதை தவிர்த்து தற்போது சாலையோரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த, உபயோகமற்ற வாகனங்கள் மீது மண்டலம் வாரியாக  வரிசை  எண்ணுடன் கூடிய நோட்டீஸ்  ஒட்டப்படும். உரிமை கோரப்படாத வாகனங்கள் 15 நாட்களுக்கு பின் அங்கிருந்து அகற்றப்பட்டு வட்டாரம் வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்படும். இதன்பிறகு காவல்துறையின் தடையில்லா சான்று பெறப்பட்டு ஏலம்  விடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: