×

சாமல்பள்ளம் அருகே பிரமாண்ட பெருமாள் சிலை 7வது நாளாக நிறுத்தம்

கிருஷ்ணகிரி, பிப்.15: சாமல்பள்ளம் அருகே, பிரமாண்ட பெருமாள் சிலை ஏற்றப்பட்ட லாரி 7வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் ஈஜிபுரா பகுதியில் 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்க, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கொரக்கோட்டை மலையில் இருந்து, 350 டன் எடை கொண்ட பிரமாண்ட பெருமாள் சிலை, கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி கார்கோ லாரியில் புறப்பட்டது. கடந்த ஜனவரி 16ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சிங்காரப்பேட்டைக்கு வந்தது. பின்னர் போச்சம்பள்ளி, மத்தூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு நோக்கி சென்றது. இந்நிலையில், கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, குருபரப்பள்ளி அருகே மார்கண்டேயன் நதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் இந்த கார்கோ லாரி செல்ல முடியாது என்பதால், நதியிலேயே தற்காலிகமாக மண் சாலை அமைக்கப்பட்டது. அதன் வழியாக சிலை ஏற்றப்பட்ட இரண்டு இன்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்கோ லாரி சென்ற போது, லாரியின் டயர்கள் மண்ணில் புதைந்தது. பின்னர், சாலையில் ஜல்லிக்கற்கள் மற்றும் மண்ணை கொட்டி சிறிது மேடாக்கிய பின், கார்கோ லாரி புறப்பட்டது. ஆனால், சாலை முடியும் இடத்தில் அதிக அளவில் மேடாக இருந்ததால், மீண்டும் லாரி நிறுத்தப்பட்டது. இதையடுத்து 5 நாட்களுக்கு பின், கடந்த 8ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கார்கோ இன்ஜின்கள் மற்றும் 5 ராட்சத டிப்பர் லாரிகள், சிலை ஏற்றப்பட்ட லாரியுடன் இணைக்கப்பட்டு, கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாமல்பள்ளம் என்னுமிடத்தில் லாரி நிறுத்தப்பட்டது. ஆனால், லாரி கடந்தால் பாலம் உடைந்துவிடும் என்பதால், அந்த பாலத்தை கடக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, பாலத்தின் அருகே புதியதாக தற்காலிக பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. பணி நிறைவடைந்த உடன், அருகில் உள்ள மற்றொரு ஆற்றின் குறுக்கே தற்காலிக சாலை அமைத்து முடித்தனர். இந்நிலையில் நேற்று, சின்னார் என்ற இடத்தில், ஆற்றின் குறுக்கே தற்காலிக மண் சாலை அமைக்கும் பணி துவங்கியது. இந்த பணி நிறைவடைய மேலும் 2 நாட்கள் ஆகும் என தெரிகிறது. இதனால், தொடர்ந்து 7 நாட்கள், சிலை ஏற்றப்பட்ட லாரி ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களும் தினமும் அங்கு கூடி, சிலையை வணங்கி வருகின்றனர்.  

Tags : Perumal Perumal ,stop ,Sambalpallam ,
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்