அருப்புக்கோட்டையில் குப்பை மேடான கோயில் ஊருணி

அருப்புக்கோட்டை, பிப். 2: அருப்புக்கோட்டையில் கோயிலுக்குச் சொந்தமான ஊருணி குப்பை மேடாக மாறி வருகிறது. அருப்புக்கோட்டையில் உள்ள திருச்சுழி ரோட்டில், சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு சொந்தமான நீராவி பிறமடை ஊருணி உள்ளது. இதன் பரப்பளவு ஒரு ஏக்கர் 88 சென்ட் ஆகும். இந்த ஊருணியில் மழைநீர் தேங்கி, உபரிநீர், கோயிலுக்குச் சொந்தமான சூர்யபுஷ்கரணி என்னும் தெப்பக்குளத்தில் தேங்கியது. நாளடைவில் ஊருணியில் குப்பைகள், கட்டிட கழிவுகளை கொட்டி அதனை மூடிவிட்டனர். ஊரணியின் ஒரு பகுதியை கழிவுநீர் ஓடையாக மாற்றிவிட்டனர். தற்போது இந்த ஊருணி முட்புதர்கள் வளர்ந்து சமூகவிரோதிகளின் கூடாரமாக உள்ளது. கொட்டும் குப்பைகளில் அடிக்கடி தீ வைக்கின்றனர். நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த ஊருணி சுகாதாரமற்ற முறையில் இருப்பதால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும், பொதுமக்களும் கடக்கும்போது மூக்கைப் பிடித்துச் செல்கின்றனர். ஊருணியின் அருகே கோயில், திருமண மண்டபங்கள் இருப்பதால் விழாக்களுக்கு வருபவர்கள் முகஞ்சுழிக்கின்றனர். இந்நிலையில், ஊருணி ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், கழிவுநீர் ஓடை ஆகியவற்றை கோயில் நிர்வாகம் பொதுநல அமைப்புகள், தொழிலதிபர்களிடம் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக ஊருணியில் போர்டு வைத்துள்ளனர். அதில், சூர்ய புஷ்கரணி என்னும் திருக்குளத்திற்கு நீராதாரமாக இந்த ஊருணி உள்ளது. இதில், நகராட்சியோ, தனிநபர்களோ, குப்பைகள் கழிவு பொருட்களை கொட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். எனவே, நீர்நிலையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: