20 நாள் நடந்த சோதனையில் பறிமுதல் தனியார் சிமென்ட் நிறுவனத்திடம் 50 டன் பிளாஸ்டிக் ஒப்படைப்பு

சென்னை, ஜன.23: பிளாஸ்டிக் தடையை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 50 டன் பிளாஸ்டிக் பொருட்களை தனியார் சிமென்ட் நிறுவனத்திடம் சென்னை மாநகராட்சி ஒப்படைத்துள்ளது.ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை 2019 ஜனவரி 1ம் தேதி முதல் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துதை கண்காணிக்க வார்டு மற்றும் மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டன. இவர்கள் கடந்த 20 நாட்களாக பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு முகாம் மற்றும் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர்.இதன்படி கடந்த மாதம் 31ம் தேதி முதல் 18ம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 67.72 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டும், மாநகராட்சி அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளது.

அதிகபட்சமாக கடந்த ஜனவரி 5ம் தேதி 13.24 டன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 17ம் தேதி 0.22 டன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 9.50 டன்னும், மாதவரம் மண்டலத்தில் குறைந்தபட்சமாக 0.63 டன்னும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட 67 டன் பிளாஸ்டிக் பொருட்களில் 50 டன் பிளாஸ்டிக் பொருட்கள் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமென்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தவிர்த்து மீதம் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் சாலைகள் போட பயன்படுத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

Related Stories: