கிண்டி கோல்ப் மைதானத்தில் கட்டிட பணியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: கிண்டி கோல்ப் மைதானத்தில் கட்டிட பணி மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.சென்னை கிண்டியில் கோல்ப் விளையாட்டுக்காக 80.40 ஏக்கர் நிலம் காஸ்மோபாலிடன் கிளப் மற்றும் கோல்ப் பெடரேஷன் ஆகியவற்றுக்கு தமிழக அரசு கூட்டு குத்தகைக்கு கொடுத்துள்ளது. இந்த குத்தகை தற்போது 2026வரை  புதுப்பிக்கப்பட்டுள்ளது. குத்தகை ஒப்பந்தத்தின்படி, அந்த இடத்தில் எந்த பயன்பாட்டுக்காக குத்தகை தரப்பட்டுள்ளதோ அதை தவிர்த்து வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது.இரண்டு கிளப்புகள் நில நிர்வாக கமிட்டியின் அனுமதி பெறாமல் எந்த கட்டுமானப் பணியையோ வளர்ச்சிப் பணியையோ மேற்கொள்ளக்கூடாது.

இந்நிலையில், அந்த மைதானத்தில் கோல்ப் பெடரேஷன் சிறிய அளவில் கட்டுமானப் பணியை தொடங்கியது. இதையடுத்து, அந்த கட்டுமானப்பணிக்கு தடை விதிக்கக்கோரி காஸ்மோபாலிடன் கிளப் உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காஸ்மோபாலிடன் கிளப் சார்பில் மூத்த வக்கீல் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, ஒப்பந்தத்திற்கு முரணாக மைதானத்தில்  கோல்ப் பெடரேஷன் கட்டிடப் பணிகளை செய்துவருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு நோட்டீசும் அனுப்பியுள்ளது என்றார். கோல்ப் பெடரேஷன் சார்பில் மூத்த வக்கீல் பி.ரகுராமன் ஆஜராகி, அத்தியாவசிய தேவையாக கழிவறை மற்றும் கை கழுவும் இடம் தேவை உள்ளதால் தற்காலிகமாக கட்டி வருகிறோம். அரசின் அனுமதி பெறாமல் கட்டிடப்  பணியை மேற்கொள்ள மாட்டோம் என்று வாதிட்டார். இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் தடை உத்தரவு எதுவும் தேவையில்லை. எனவே, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 28ம் ேததிக்கு தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.

Related Stories: