போகி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 15 இடங்களில் காற்றின் தரம் கண்காணிப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டம்

சென்னை: போகிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 15 இடங்களில் காற்றின் தரத்தை கண்காணிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 15 ஆண்டுகளாக போகி பண்டிகைக்கு முன்பு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு  பிரசாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் காரணமாக,  கடந்த வருடங்களில் பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது.இந்த ஆண்டும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மற்றும் அனைத்து மாவட்ட தலைமையிடங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மேலும் பள்ளி கல்வித்துறையின் மூலம் புகை மாசு பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு போகி பண்டிகைக்கு முந்தைய நாள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 30 குழுக்கள் அமைத்து காவல் துறையுடன் இணைந்து அனைத்து சென்னை  மாநகராட்சி மண்டங்களிலும் ரோந்து பணி மேற்கொள்ள  முடிவு செய்துள்ளது. போகிப் பண்டிகையின் போது சென்னையில் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, வாரியம் போகிப்பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளிலும், 15 இடங்களில் 24 மணிநேரமும்  காற்றின் தரத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இந்த தகவல்கள்   வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.

Related Stories: