மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் அரசின் அவலங்களை பட்டியலிட்டு நிர்வாகிகள் பேச்சு

சேலம், ஜன.10: தற்போதைய அதிமுக அரசின் அவலங்களை மக்களிடையே விளக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் நேற்று கிராம வாரியாக ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், வீரபாண்டி ஒன்றியத்தில் உத்தமசோழபுரம் ஊராட்சியில், சிறப்பு ஊராட்சி சபை  கூட்டம் நடத்தப்பட்டது. தனபால் வரவேற்றார். முத்துசாமி, வசந்தா முன்னிலை வகித்தனர். வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலாசேகர் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா பங்கேற்று பேசுகையில், திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும், தற்போதைய அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அரசின் நலத்திட்ட உதவிகள் பெரும்பாலும் மக்களை சென்றடைவதில்லை. அதிமுகவினரே அவற்றை எடுத்துக் கொள்ளும் நிலை உள்ளது.

 இந்த ஊராட்சி கூட்டமானது திமுக ஆட்சியில் விடுபட்ட அனைத்து நல்ல திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்து கூறுவதற்காகவே. அரசு சார்பில் நடத்தப்படும் கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதோடு சரி, எவ்வித திட்டங்களும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுவதில்லை. மக்கள் தங்களது பிரச்னைகளை மனுவாக கொடுக்கும்பட்சத்தில் அதை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். இல்லையெனில் போராடவும் தயாராக உள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தீர்க்கப்படாத பிரச்னைகள் அனைத்தும் நிறைவேற்றுவோம். இவ்வாறு வீரபாண்டி ராஜா பேசினார். ஆத்தூர்: ஆத்து£ர் ஒன்றியம் அப்பம்மசமுத்திரம் ஊராட்சியில், திமுக சார்பில் தமிழகத்தின் அவலநிலைக்கு முற்றுபுள்ளி வைக்கும் நேரம் என்ற அடிப்படையில் ஊராட்சி சபை கூட்டம் சிவன் கோயில் திடலில் ஒன்றிய செயலாளர் டாக்டர் செழியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளரும் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான வி.பி. துரைசாமி கலந்து கொண்டு மக்களிடம் கலந்துரையாடினார். அவர் பேசியதாவது; தமிழகத்திலும், மத்தியிலும் பொதுமக்களை ஏமாற்றும் அரசாங்கங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது உள்ள எடப்பாடி அரசு ஏழைகளின் வாழ்வாதாரத்தை மறந்து தங்களின் வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இன்றைக்கு ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வழங்கப்படுகிறது. திமுகவின் ஆட்சியில் ரேஷன் கடைகளில் 1ம் தேதி முதலே எல்லா பொருட்களும் வழங்கப்படும். ஆனால் தற்போது 7ம் தேதி்க்கு பின் வா, 15ம் தேதி வா என ஏழைகள் அலைகழிக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் அனைவரும் வேலை திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள அனைவருக்கும் தினமும் ஏரி வேலை வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய பாஜக அரசில் குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே வேலை என்ற நிலை உள்ளது. இன்றைக்கு அனைவருக்கும் வேலை கொடுத்து இருப்பார்கள் காரணம் யாரும் இந்த கூட்டத்திற்கு வந்து கலந்து கொள்ள கூடாது என்பதால்தான். இதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள் ஏழைகளுக்கு வாழ்வளிக்கும் இயக்கம் திமுக தான்.

வரும் சித்தரை மாதம் தேர்தல் வரும் போது உதயசூரியனுக்கு மறக்காமல் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். மீண்டும் முதியோர் உதவி தொகை கிடைக்க திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மல்லியகரை ராஜா, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் வரதராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவராமன், பெரியசாமி, மாவட்ட மகளிரணி நல்லம்மாள், வெள்ளையன், தமிழ்மாறன், சேட்டு, சண்முகம், கருணாநிதி, அயோத்திராமன், பிரபு, அண்ணாதுரை, சக்கரவர்த்தி ஆகியோர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய மாணவரணி அருண் நன்றி கூறினார்.

இதனையடுத்து அக்கிசெட்டிபாளையம் கிராமத்திலும் இதேபோன்ற கூட்டம் நடைபெற்றது. அங்கும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மகுடஞ்சாவடி: மேற்கு மாவட்ட திமுக சார்பில், மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் ஊராட்சி சபை கூட்டம் மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய பொறுப்பாளர் பச்சமுத்து வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் கோபால், துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அடிப்படை வசதியான சாலை, குடிநீர், கழிப்பிட வசதி, முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா உள்ளிட்டவை கேட்டு மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதேபோல் அ.புதூர் கிராமத்தில் கூட்டம் நடைபெற்றது.

× RELATED பசுமை கரங்கள் சார்பில் மரக்கன்று நடும் விழா