வாணிஒட்டு அணை திட்டம் பணிகளை துரிதப்படுத்த கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்

கிருஷ்ணகிரி, டிச.12: வாணிஒட்டு அணை திட்டப்பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று கிருஷ்ணகிரியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.  தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. வாணிஒட்டில் அணை கட்டுவதற்கு சர்வே பணியை வேகப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் அனைத்து ஏரிகளுக்கும், தென்பெண்ணை ஆற்று நீர் கால்வாய் அமைத்து அனுப்ப வேண்டும். மேடான ஏரி பகுதிகளுக்கு மின் மோட்டார் மூலம் நீர் ஏற்றி கொடுக்க வேண்டும். கெலவரப்பள்ளி, அழியாளம் அணைக்கட்டுகளில் இருந்து ராயக்கோட்டை, கெலமங்கலம், பைரமங்கலம், பேரிகை, வேப்பனப்பள்ளி ஏரிகளுக்கு கால்வாய் அமைத்து நீர் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எம்.ராமகவுண்டர் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கண்ணப்பன், தமிழரசு, திம்மராயன், நரசிம்மன், ஊர்கவுண்டர் ராஜப்பன், கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து மாநில தலைவர் ராமகவுண்டர் பேசியதாவது: வாணி ஒட்டு என்ற இடத்தில் அணை கட்டி ஒட்டுப்பட்டி, காட்டூர், அகரம், பூவத்தி, ஆலப்பட்டி, மோரமடுகு, சோக்காடி, துடுகனஹள்ளி, புங்கம்பட்டி, சாப்பரம், மோரனஹள்ளி, பனகமுட்லு, குட்டப்பட்டி, எரசீகளஹள்ளி, எலுமிச்சனஹள்ளி, முதலிப்பட்டி, அனுமந்தபுரம், அண்ணாமலைப்பட்டி வழியாக தும்பலஹள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல அரசு இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்காக சர்வே செய்ய நிதி ஒதுக்கி பணிகளை வேகப்படுத்திட வேண்டும். வாணிஒட்டு அணை கட்டி மார்கண்டேயன் நதியில் உள்ள மாரசந்திரம் தடுப்பணையில் இணைத்து படேளதாவ் ஏரி வழியாக தண்ணீர் வழங்க வேண்டும். ஆழியாளம் அணைக்கட்டை உயர்த்தி ராயக்கோட்டை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை பகுதி ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம், அணைகள் கட்டி மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரம் ஏரிகளுக்கும் நிலத்தடி நீர்மட்டம் உயர அரசு நிதி ஒதுக்கி உடனடியாக பணியை தொடங்க வேண்டும், என்றார். இதில் மாநில துணைத்தலைவர் தோப்பையகவுண்டர், மேற்கு மாவட்ட தலைவர் வண்ணப்பா, பொருளாளர் சுப்பிரமணி ரெட்டி, நசீர் அகமத், முனிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: