ரசாயன கழிவுகள் கொட்டுவதால் நஞ்சாக மாறும் மணலி ஏரி நீர்: ஆடு, மாடுகள் உயிரிழக்கும் பரிதாபம்

திருவொற்றியூர்: மணலி ஏரியில் தனியார் சிலர் ரசாயன கழிவுகளை கொட்டுவதால், நீர் நஞ்சாக மாறி வருகிறது. இதை பருகும் கால்நடைகள் இறக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மணலி ஏரி சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, சுற்றுவட்டார பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது. மழைக்காலங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் நீர், இந்த ஏரியில் தேங்கும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், கால்நடைத் துறை நிர்வாகம் இந்த ஏரியை முறையாக பராமரிக்காததால் செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது. மேலும், காயத்தாமரை படர்ந்து தூர்ந்துள்ளது. இதனால், மழைக்காலங்களில் ஏரியில் போதிய நீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும், என்று பொதுமக்கள் பல ஆண்டாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.  

இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் போது ஏரியில் நீரை சேமிக்க முடியாமல், கால்வாய் வழியாக சென்று வீணாக கடலில் கலந்தது. அதுமட்டுமின்றி ஏரியை ஒட்டி உள்ள குடியிருப்புகளிலும் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

அப்போது, மணலி ஏரியை தூர்வாராததே இதற்கு காரணம் என்று கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ஆனாலும் எந்த பயனும் இல்லை. இதையடுத்து பொது நல சங்கங்கள், பொதுமக்கள் இணைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஏரியில் உள்ள கருவேல மரங்கள் மற்றும் செடி கொடிகளை அகற்றி, ஏரியின் ஒரு பகுதியில் கரை அமைத்தனர். இதை பார்த்த கால்நடைத் துறை அதிகாரிகள், ஏரியை தூர் வருகிறோம் என்று நல சங்கங்களிடம் உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை ஏரியை தூர்வாருவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மீண்டும் ஏரியில் செடி, கொடிகள் வளர்ந்து தூர்ந்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மணலி பகுதியின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியை கால்நடைத் துறை பராமரிப்பதே இல்லை. இதனால் ஏரி தூர்ந்து வருகிறது. இதை பயன்படுத்தி சிலர் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து பிளாட் போடுகின்றனர். ற்றுவட்டாரத்தில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால் குடியிருப்பில் இருந்து வரக்கூடிய கழிவுநீரையும் இந்த ஏரியில் விடுகின்றனர். இதனால், ஏரி நீர் மாசடைந்து வருகிறது. சமீபகாலமாக தனியார் சிலர் கழிவுநீர் மற்றும் ரசாயன கழிவுகளை லாரியில்  கொண்டு வந்து இந்த ஏரியில் விடுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு ஏரி நீரை குடிக்கும் மாடு, ஆடு, நாய் போன்ற  உயிரினங்கள் இறக்கும் நிலை ஏற்படுகிறது.

இதை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இந்த நிலை நீடித்தால்  சுற்றுவட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீரும் கெட்டுவிடும். பொதுமக்கள் பல்வேறு  தொற்று நோய்க்கு ஆளாவார்கள். எனவே இந்த ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். மேலும் கால்நடை பராமரிப்பு துறையிடம் உள்ள இந்த ஏரியை  பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். எங்களது கோரிக்கையை  ஏற்காவிட்டால் ஏரியை சீரமைக்க கோரி போராட்டம் நடத்துவோம்,’’ என்றனர்.

அதிகாரிகள் அடாவடி

ஆரம்ப காலங்களில் மணலி பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய இந்த ஏரியை கால்நடைத் துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் புதர்மண்டி தூர்ந்துள்ளது. இதை பயன்படுத்தி, ஏரியின் மொத்தப் பரப்பளவில் சுமார் 50 ஏக்கர் வரை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், குடிசை மாற்று வாரியம் சார்பில், நூற்றுக்கணக்கானோருக்கு இந்த ஏரி கரையோரம் நிலம் ஒதுக்கி வீட்டு மனை வழங்கப்பட்டுள்ளது. ஏரியை பாதுகாக்க வேண்டிய அரசு அதிகாரிகளே ஏரியை பாழாக்கி வருவது பொதுமக்களிடைேய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: