சூட்டை தணிக்கும் நன்னாரி !

நன்றி குங்குமம் டாக்டர்

கோடை வந்துவிட்டாலே உடல்சூடு, வேர்க்குரு, கட்டி என வந்து தொல்லை கொடுக்கும். இதற்கு நன்னாரி சிறந்த தீர்வாக இருக்கும். மேலும் உடலுக்கும் பல நன்மைகளைத் தருகின்றது. நன்னாரி, கொடி வகையைச் சேர்ந்தது. இலை நீண்டு ஊசிபோல் ஒடுங்கி இரு்ககும். இலையின் நடுவில் வெண்மை கலந்த பச்சையும், ஓரங்களில் அடர் பச்சை என இரண்டு வகைகளில் உள்ளது. சுருள், சுருளாக இருந்தால் சீமை நன்னாரி, மாகாளிக் கிழங்கு வேர்தான் நாட்டு நன்னாரி.

இதை பானங்கள் தயாரிக்கவும், நோயைக் குணப்படுத்தவும் பயன்படுத்துவர். இதன் வேரை தண்ணீரில் ஊற வைத்து கஷாயமாகவோ, சர்பத்தாகவோ அருந்த நல்ல பலன்களைப் பெறலாம். நன்னாரிப் பொடியை ஒரு கப் பாலில் 1 தேக்கரண்டி கலந்து குடிக்க சிறுநீர் மஞ்சளாக போவது நிற்கும். கஷாயத்தை சிறிது பால் சேர்த்து சாப்பிட வயிற்றுப்போக்கு, இருமல் குணமாகும். வேரைச் சுட்டுக் கரியாக்கிப் பொடித்து சீரகம் சர்க்கரை சேர்த்து நெய்யில் குழைத்து தினமும் 2 வேளை 10 நாட்கள் சாப்பிட சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு, உடல் சூடு குணமாகும். நன்னாரி பசியைத் தூண்டும் சூட்டைத் தணிக்கும் உடம்பிற்கு குளிர்ச்சியைத் தரும்.

இது வாதம், மூட்டுவலி, சிறுநீரகக் கோளாறு, வேர்க்குரு, வேனல்கட்டி, தலைசூடு, தலைவலிக்கு மருந்தாக தீர்வளிக்கிறது.நன்னாரி வேரைக் காய்ச்சி நீரில் பெருங்காயம் நெய் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும் பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அல்சர் வராது. பால் அல்லது டீ காய்ச்சி இறக்கியதும் சர்க்கரை போடும்போது நன்னாரி வேர்ப் பொடியையும் ஒரு தேக்கரண்டி சேர்த்து குடிக்க மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

குடிக்கும் பானைத் தண்ணீரில் நன்னாரி வேரை நன்கு கழுவி விட்டு துளசியுடன் சேர்த்து போட்டு வைக்க, தண்ணீர் மணமாக இருப்பதுடன் கோடையின் தாகத்தையும் தீர்க்கும். குளியல் பொடி தயாரிக்கும்போதும், நன்னாரி வேரை சேர்த்துக் கொள்ள மணமாக இருப்பதுடன் தோல் நோய்கள் வராமல் தடுக்கும். மேலும், உடலை உஷ்ண நோய்களிலிருந்தும் பாதுகாக்கும்.

தொகுப்பு : மகாலட்சுமி சுப்பிரமணியன்.

Related Stories: