நடுரோட்டில் சாவியுடன் ஐடி வாகனத்தை விட்டு சென்ற டிரைவர் ‘ஏய்... ரூல்ச கரெக்டா பாலோ பண்ணுவேன்... அண்ணன் போதையானா வண்டி எடுக்க மாட்டேன்...’

கீழ்ப்பாக்கம்: போதை தலைக்கேறியதால், வருமான வரித்துறை கமிஷனர் வாகனத்தை நடுரோட்டில் சாவியுடன் விட்டுசென்ற டிரைவரால் கீழ்ப்பாக்கத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  கீழ்ப்பாக்கம் அழகப்பா சாலையின் நடுவில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு கார் நீண்டநேரமாக நின்றுருந்தது. அந்த காரில் இந்திய அரசு சின்னத்துடன் வருமான வரித்துறை ஆணையர் என்று எழுதப்பட்டிருந்தது. வெகு நேரமாக அந்தக் கார் நின்று கொண்டிருந்ததால் ஒருவேளை அந்தப் பகுதியில் வருமான வரித்துறையினர் ரெய்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று அவ்வழியாக சென்றவர்கள் நினைத்தனர்.

ஆனால் அதிகாலை 2.30 மணி வரை அதே இடத்தில் இருந்தது. இதனால், சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் ஜெகதீசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரை சோதனையிட்டனர். காரில் யாரும் இல்லை. ஆனால் அந்த காரில் சாவி மட்டும் இருந்தது.  உடனடியாக அந்த காரை கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

மேலும், கார் நின்றிருந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது, காரில் இருந்து ஒருவர் இறங்கி தள்ளாடியபடி கீழ்ப்பாக்கம் சாஸ்திரி நகர், 8வது தெருவுக்குள் சென்றது தெரியவந்தது. இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், போதையில் சென்றவர் புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த மதன்குமார் (29) என்பதும், அவர் சென்னை வருமான வரித்துறை ஆணையாளர் ரத்தினசாமியிடம் டிரைவராக பணிபுரிந்து வருவதும் தெரிந்தது. மேலும், நேற்று அதிகாலை ரத்தினசாமி விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறியதால், நேற்று முன்தினம் இரவே மதன்குமார் காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், மதன்குமார் அளவுக்கு அதிகமாக குடித்ததால் அவரால் காரை ஓட்ட முடியாமல் சாலையில் நிறுத்திவிட்டு ரத்தினசாமியிடம் கார் பழுதாகிவிட்டது வேறு ஒரு காரில் செல்லும்படி கூறிவிட்டு, போதையில் தள்ளாடியபடி வீட்டிற்கு சென்றது தெரிந்தது. இதனால், அவர் மாற்று காரில் விமான நிலையம் சென்றார். புகாரின்பேரில் கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். அரசு அதிகாரியின் காரை குடிபோதையில் ஓட்டி சென்று நடுரோட்டில் விட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories: