பல்லாவரம் நகராட்சியில் அவலம் குடியிருப்பு பகுதியில் திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு : தொற்று நோய் பீதியில் மக்கள்

பல்லாவரம்: பல்லாவரத்தில் குடியிருப்பு பகுதியில் வளர்க்கப்படும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.  பல்லாவரம் நகராட்சியில் பழைய பாண்ட்ஸ் கம்பெனி பின்புறம்,  ராஹத் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பு அருகே காலி இடம் உள்ளது. இங்கு, 20க்கும் மேற்பட்ட பன்றிகளை சுற்றி வருகிறது. இந்த பன்றிகள் அருகில் உள்ள 23வது வார்டு குடியிருப்பு பகுதியில் அடிக்கடி நுழைவதுடன், அங்குள்ள திறந்தவெளி கழிவுநீர் கால்வாயில் இறங்கி குப்பைகளை கிளறுகின்றன. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘தற்போது தமிழகமெங்கும் பன்றிக் காய்ச்சல், டெங்கு மற்றும் மலேரியா போன்றவை வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்துடன், சுகாதாரமற்ற முறையில், நோய்களை பரப்பும் வகையில் செயல்படும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், குடியிருப்பு பகுதி அருகே வளர்க்கப்படும் இந்த பன்றிகளால் தொற்று நோய்  பீதியில் வசித்து வருகிறோம். குப்பை தொட்டிகளில் உள்ள குப்பையை பன்றிகள் கிளறுவதால் தெருவெங்கும் சிதறி, அந்த பகுதியே கடும் துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதிக்கு கொசு மருத்து அடிக்க கூட நகராட்சி நிர்வாகம் அடிப்பதில்லை. எனவே, பொது இடத்தில் அனுமதியின்றி பன்றிகளை வளர்க்கும்  நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், குடியிருப்பு அருகே சுற்றித் திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: