பட்டா வழங்காமல் நிலம் கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தாசில்தார் அலுவலகம் முற்றுகை

திருவொற்றியூர்: குடிசை மாற்று வாரியம், நிலத்தை கையகப்படுத்தியதை கண்டித்து, தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பட்டா வழங்க வேண்டும் என கோஷமிட்டதால், மாதவரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 32வது வார்டுக்கு உட்பட்ட வில்லிவாக்கம் சாலை லட்சுமிபுரத்தில் பஜனை கோயில் தெரு, அசோகா தெரு, அம்மன் கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு ஆகிய பகுதிகளில் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த 750க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதிகள் அனைத்தும் அரசு கிராம நத்தம் நிலங்களாகும். இங்கு குடியிருக்கும் மக்களுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும் என கலெக்டரிடம் பலமுறை இப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். ஆனாலும், அவர்களுக்கான நிலப்பட்டா குறித்து இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், இந்த இடங்களை தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அதிகாரிகள், மக்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமல் கையகப்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மாதவரம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டந்னர்.

அங்கு, தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி,  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து தாசில்தார் ரமேஷ்குமார், அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் 5 தலைமுறை வாழ்ந்து வருகிறது. ஆனால், நாங்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்குவதற்கு கடந்த 2004ம் ஆண்டு வருவாய் துறை அதிகாரிகள் அளவீடு செய்தனர். அதற்கான ஆவணங்களும் தயார் செய்யப்பட்டன.

ஆனால் திடீரென எங்களது நிலத்தை, எங்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமல் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கையகப்படுத்திவிட்டனர். இதனால், குடிசை மாற்று வாரிய அதிகாரிகளின் தடையில்லா சான்று கிடைத்தால்தான் பட்டா வழங்க முடியும் என வருவாய் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஏரி மற்றும் குளங்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்கும் அதிகாரிகள், பூர்வீகமாக வாழும் எங்களுக்கு பட்டா வழங்க மறுப்பது ஏன். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்’’ என்றனர்.

Related Stories: