மாற்றத்துக்கான பெண்கள் வான்காரி மாத்தாய்

நன்றி குங்குமம் தோழி

“உலகில் நடந்த, நடக்கும் போர்களை உற்று நோக்கினால், அவை வளத்தை அபகரிப்பது அல்லது வளத்தை ஒரு பிரிவினருக்கு கிடைக்கவிடாமல் செய்வதாலே ஏற்பட்டன, ஏற்படுகின்றன” என்றார் வான்காரி மாத்தாய்.தன் வாழ்நாளின் பெரும்பான்மையான ஆண்டுகளை மரக்கன்றுகளை நடுவதையே பேரியக்கமாக நடத்திய கென்ய நாட்டுப் போராளி. பசுமைப்  பகுதி இயக்கத்தின்  நிறுவனரான இவருக்கு, 2004ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கென்யா நாட்டின் நெய்ரி மாவட்டத்தில் உள்ள இதிதி கிராமத்தில் 1940ல் பிறந்தவர். அந்தக் காலகட்டத்தில் ஆப்பிரிக்க இனப் பெண்களுக்கு பள்ளிப் படிப்பு என்பது எட்டாக்கனி. அத்தகைய சூழலில் பள்ளிப்படிப்பை முடித்து, ஸ்காலர்ஷிப் உதவியுடன் அமெரிக்கா சென்று கல்லூரிப் படிப்பையும் முடிக்கிறார் வான்காரி. கென்யா விடுதலைக்குப் பின் தாய்நாடு திரும்பியவர், முனைவர் பட்டமும் பெறுகிறார். ஆப்பிரிக்க கண்டத்திலேயே முதல் முனைவர் பட்டம் பெற்ற பெண் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தது. நைரோபி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து, அப்பல்கலைக் கழகத்தின் முதல் பெண் பேராசிரியர் என்ற பெருமையையும் சேர்த்துக் கொண்டார்.

மாத்தாய் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்வில் ஈடுபட்ட வான்காரி, மூன்று குழந்தைகளுக்குத் தாயாகிறார். கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தாகி இருவரும் பிரிய நேர, இப்பிரிவு வான்காரியை துவண்டு போக செய்தாலும், விரைவில் அதிலிருந்து மீண்டெழுந்தார்.

வான்காரி அமெரிக்காவில் இருந்தபோது மார்ட்டின் லூதர் கிங் நடத்திய போராட்டங்களால் ஈர்க்கப்பட்டதுடன், தான் பிறந்த கென்ய நாட்டிலும் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரப் பெற்றவராய், பேராசிரியர் பணியை  துறக்கிறார். இவர் முன்னெடுத்த ‘Humming bird’ பிரச்சாரம் கென்யா வரலாற்றில் காலத்துக்கும் அழியாப் புகழ்பெற்றது. கிட்டத்தட்ட முற்றும் முழுவதுமாகச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட ஆப்பிரிக்க பகுதியில் இருந்து தனி நபராகக் குரலெழுப்பி வறண்டு கிடந்த பூமித்தாயின் மீது பசுமைப் போர்வை போர்த்தச் செய்தார்.

வான்காரி மாத்தாயால் வெறும் 7 மரங்கள் நட்டுத் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இன்று கென்யாவில் மட்டுமே 5 கோடிக்கும் மேற்பட்ட மரங்களை நட்டுப் பாதுகாத்து வருகிறது. இதன் மூலம் அழிவின் விளிம்பில் இருந்து அவர் மீட்டெடுத்த மலைகள், ஆறுகள், நீரோடைகள் ஏராளம். காடுகள் அழிப்பிற்கு எதிராக அவர் கொடுத்த குரல் அன்றைய அதிகார வர்க்கத்தை நிலைகுலையச் செய்தது. ஊர் ஊராகச் சென்று ஏழை, எளிய மனிதர்களிடம் குறிப்பாகப் பெண்களிடம் பேசினார். சுற்றுச்சூழல் மட்டுமல்லாமல் கல்வி சார்ந்த

விழிப்புணர்வுப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

1976 முதல் கென்ய தேசியப் பெண்கள் கமிஷன் என்னும் சமூக அமைப்பில் தீவிரமாக பங்காற்றி, 1977ல் கிரீன்பெல்ட் மூவ்மென்ட்  என்ற அமைப்பை உருவாக்கினார். கென்யாவின் ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களுடன் நேரடித் தொடர்பு ஏற்பட, ஊரகங்களில் வாழும் குடும்பங்களின் வாழ்வு மிகவும் வறண்டு போயுள்ளதையும், அவர்களின் உணவு பாதுகாப்பானதாக இல்லை என்பதையும், சமைக்க விறகுகளைத் தேடி வெகு தூரம் தினமும் நடந்து செல்வதையும், பணிபுரியும் இடங்களில் குறைந்த ஊதியம் கிடைக்கப் பெறுவதையும் அக்குடும்பங்களுடன் உரையாடும்போது வான்காரிக்கு தெரிய வருகிறது.

இப்பிரச்சனைகளுக்கு தன்னாலான தீர்வை முன்னெடுக்க சிந்திக்கலானார். சிறுவயதில் வீட்டருகே இருந்த ஓடை தற்போது வறண்டு இருப்பதையும், 100 மரங்கள் ஆப்பிரிக்காவில் வெட்டப்பட்டால், 9 மரங்கள்தான் நடப்படுகின்றன என்ற ஐ.நா ஆய்வையும், ஊரகப்பெண்களின் இன்றைய வறுமை நிலையையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்தார். எளிய மனிதர்களால் தங்கள் வாழ்விற்கும், சுற்றுச்சூழலுக்கும் செய்யக்கூடியது மரம் நடுதல்தான் என்பதைக் கண்டறிகிறார். வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக அதிகமாக மரங்கள் நடப்பட்டால் சூழலின் சமநிலை பேணப்படும் என்பதை வான்காரி உணர்ந்து, கிரீன்பெல்ட் மூவ்மென்ட் இயக்கம் மூலம், அதிகமான மரங்களை நட்டதோடு, முறையாக அவற்றை பராமரிக்கவும் செய்கிறார். ஊரகப் பெண்களுக்கு நாற்றங்கால் பண்ணைகளை அமைக்கக் கற்றுக்கொடுத்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறார்.

சூழலியல் செயற்பாட்டாளராக பரிணமித்த வான்காரி மாத்தாயை அரசியலில் ஈடுபடுத்தியது அப்போதைய கென்ய அரசு. நைரோபி நகரில் இருந்த உகூரு பூங்காவில் 62 அடுக்குகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தைக் கட்ட அப்போதைய சர்வாதிகார அரசு தீர்மானிக்க, நகரின் நடுவே கானகம் போல இருந்த பூங்காவில் கட்டிடம் கட்டுவதா எனக் கொந்தளித்த வான்காரி மாத்தாய் அவ்வூரில் இருந்த ஜனநாயக அமைப்புகளுடன் சேர்ந்து போராட்டத்தில் இறங்குகிறார். தொடர் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் சொல்லி கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டும் தடுக்க நினைத்தது அரசு. ஆனால், வான்காரி மாத்தாயும் அவருடன் இணைந்து போராடியவர்களும் போராட்டங்களை கைவிடவில்லை. இந்த நேரத்தில் வான்காரி மாத்தாய் மீது மொத்த உலகமும் தனது பார்வையை வியந்து திருப்பியது.

அரசாங்கத்தின் மூலம் பல இன்னல்களுக்கு ஆளாகி, சிறை வாழ்வு, தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சுகள் ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்ட பின்தான் மேற்கண்ட சாதனையை அவரால் நிகழ்த்த முடிந்தது சுற்றுச்சூழலுக்கு ஆதரவான இப்போராட்டத்தின் தீவிரத்தைக் கண்டு அரசு அத்திட்டத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. போராட்டங்களில் வான்காரி காட்டிய தைரியமும், விடாமுயற்சியும், அணுகுமுறைகளும் மற்ற பெண்களை வெகுவாகத் தூண்ட, அவர்களையும் வான்காரி போராட்ட களத்தில் இறக்கி போராட வைத்தார். அரசுடனான போராட்டங்கள் அதிகரிக்க அதிகரிக்க வான்காரி தொடர்ந்து கைது செய்யப்படுவதும், பின் விடுதலையாவதும் தொடர்ந்தன.

2002ல் கென்யாவில் நடைபெற்ற தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப் பெற்றிருந்த வான்காரி மாத்தாயை சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள், கானுயிர்களுக்கான துணை அமைச்சராக அப்போதைய அரசு நியமித்தது. இந்த நிலையில், சுற்றுச்சூழலுக்கும், பெண்கள் முன்னேற்றத்துக்குமான தன் பங்களிப்பை தீவிரமாக்கினார்.எய்ட்ஸ் நோயிற்கு எதிரான விழிப்புணர்வை கென்ய அரசு 2003ல் தொடங்கியது.

வான்காரி மாத்தாய் கிரின்பெல்ட் இயக்கத்தினருடன் இணைந்து பெண்களிடம் இந்நோய் பற்றிய விழிப்புணர்வை முன்னெடுத்தார். உடல்நலத்திலும், கல்வியிலும் பின்தங்கிய பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மையங்களை உருவாக்கி உதவினார். “எவ்வளவு தூரம் மாற்றத்தை நோக்கி மிகப்பெரிய அளவில் மக்களையோ அல்லது இயக்கத்தையோ கட்டமைக்கிறோமோ, அவ்வளவு தூரம் அரசுகளை அரசியல்ரீதியாக  பொறுப்புடைமை ஆக்க முடியும்” என்று மேடைகளில் முழங்கினார்.

சமூக அர்ப்பணிப்புடன் தொடர்ந்து இயங்கிவந்த வான்காரிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தபோது, “நோபல் விருது பெறும் முதல் ஆப்பிரிக்க பெண்மணி என்கிற அடிப்படையில், கென்ய மக்களின், ஆப்பிரிக்க மக்களின் சார்பில், உலகத்தின் சார்பில் இந்த விருதைப் பெற்றுக்கொள்கிறேன்” என்றார் வான்காரி. 12 விருதுகள், 15 முனைவர் பட்டங்கள், 50க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற வான்காரி மாத்தாய் “The Green Belt Movement”, “The Challenge for Africa”, “Replenishing the Earth”, அவரது சுயசரிதையான “Unbowed”, A Memoir என நான்கு புத்தகங்கள் அவரால்  எழுதி வெளியிடப்பட்டது. உடல்நலக் குறைபாடு காரணமாக, 2011 செப்டம்பர் 25ம் நாள் மரணமடைந்தார். அவரின் மறைவுக்குப் பிறகும் அவரின் கிரீன்பெல்ட்  மூவ்மென்ட் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தொகுப்பு : மகேஸ்வரி நாகராஜன்

Related Stories: