பல்லாவரம் ரேடியல் சாலையில் தடுப்புகள் இல்லாத விரிவாக்க பணியால் தொடரும் விபத்து: கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறை

பல்லாவரம்: பல்லாவரம் ரேடியல் சாலையில் மந்தகதியில், பாதுகாப்பின்றி நடந்து வரும் சாலை விரிவாக்கப்பணியால் அடிக்கடி விபத்து நடக்கிறது. சாலை தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்காமல்  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். பல்லாவரம் முதல் துரைப்பாக்கம் வரையிலான ரேடியல் சாலையை அகலப்படுத்தும் பணிகளை பல கோடி மதிப்பில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் தொடங்கப்பட்டது. ஆனால், இந்த சாலை விரிவாக்கப் பணியானது பல மாதங்களாக மந்தகதியில் நடந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், முறையான தடுப்புகள் அமைக்காமல் மேற்கொள்ளப்படும் சாலை விரிவாக்கப் பணியால் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருவதாக கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இருப்பினும் தற்போது வரை, விபத்து குறித்த எச்சரிக்கை பதாகைகளோ அல்லது விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் எவ்வித  தடுப்புகளோ அமைக்காமல் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.

இதன் விளைவாக நேற்று காலை பல்லாவரம் ரேடியல் சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரி அருகே மணல் லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று நிலை தடுமாறி சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த லாரியை ஓட்டி வந்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த டிரைவர் ரமேஷ் (26) காயமடைந்தார். எதிர்பாராத இந்த சாலை விபத்தால் அப்குதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து வாகன விபத்தால் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் முன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதுடன், சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: