சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு தீயாய் பரவுகிறது பன்றிக்காய்ச்சல் அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு

மதுரை, நவ. 8: மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட 25 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பன்றிக்காய்ச்சல் பரவுவதை தவிர்க்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டத்தில் வைரஸ், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற அருகே உள்ள மாவட்டங்களில் இருந்தும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் வருவதாக கூறப்படுகிறது. இவர்களில் தனியார் மருத்துவமனைகளைவிட, அரசு மருத்துவமனைகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையே அதிகம்.குறிப்பாக மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், இம்மருத்துவமனையில் டெங்கு மற்றும் பன்றிக்காய்சலுக்கு தனி வார்டுகளும், வைரஸ் காய்ச்சலுக்கு, ஆண், பெண் என, தனித்தனி வார்டுகளும், இதுதவிர குழந்தைகள் வார்டில் தனி வார்டும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனையில் தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் டெங்கு பாதித்தவர்கள் குறைவாக உள்ள நிலையில், உயிர்க்கால்லி நோயான பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதுகுறித்து டீன் மருதுபாண்டியன் கூறுகையில், `` பல்வேறு காய்ச்சல் பாதிப்பால், சுமார் 96 பேர் சிகிச்சையில் தற்போது உள்ளனர். இதில் 25 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். டெங்கு பாதித்து சிகிச்சையிலிருந்த இருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.மருத்துவப்பேராசிரியர் ஒருவர் கூறுகையில், ``பன்றிக்காய்ச்சல் பாதித்து, 5 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்த நிலை மாறி தற்போது 25 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

இதற்கு காரணம் என்ன? எந்த மாவட்டத்தில் பாதிப்பு அதிகம் உள்ளது? அங்குள்ள சுகாதாரக் குறைபாடு போன்ற விபரங்களை சேகரித்து, சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். பின்னர் பாதிப்பு உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தாமதமான சிகிச்சைதான் உயிரிழப்புக்கு காரணமா என்பதையும் உறுதி செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலமே, பன்றிக்காய்ச்சல் பரவுவதையும், உயிரிழப்பையும் தடுக்க முடியும்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: