கரூர் கலைஞர் நகர் சாலையின் நடுவே இடையூறான மின்கம்பம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர், அக்.26: கரூர் நகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் அருகே கலைஞர் நகர் பகுதி உள்ளது. இப் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் நலன் கருதி சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் மின்கம்பம் நடப்பட்டு மின்சப்ளை கொடுக்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில், அடுத்தடுத்து குடியிருப்புகள் மற்றும் விரிவாக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் தற்போது மின்கம்பம் சாலையின் நடுவே உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. மேலும், அந்த மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்கும் கடந்த 6 மாதமாக எரியாமல் உள்ளதாக கூறப்படுகிறது. கலைஞர் நகரை சுற்றிலும் அதிகளவு முட்புதர்கள் படர்ந்த பகுதியாக உள்ளன. குடியிருப்புகளின் பின்புற பகுதிகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நின்று பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வரும் நிலையில்,

இந்த மின்கம்பத்தில் உள்ள விளக்கு எரியாததால் இரவு நேரங்களில் பாம்பு போன்ற விஷ ஐந்துகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் பகுதி மக்கள் கடும் அவதியில் உள்ளனர். இந்த மின்கம்பத்தை இடம்மாற்றி தெருவிளக்கு எரிவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பகுதி மக்கள் பலமுறை மின்வாரிய அலுவலத்தில் முறையிட்டும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, கலைஞர் நகர் மக்களின் நலன் கருதி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை இடமாற்றம் செய்து, மின்விளக்கும் எரிவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: