சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மறியல்

ஆலங்குளம், அக். 11:  சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி ஆலங்குளம், சங்கரன்கோவிலில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி ஆலங்குளத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்க சமாஜம் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. பஸ் நிலையம் முன்பு நடந்த மறியலுக்கு சங்க துணை தலைவர்

 துளசிராமன் தலைமை வகித்தார். நெல்லை மேற்கு மாவட்ட ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் கார்த்திகேயன், இந்து முன்னணி வக்கீல் பிரிவு தலைவர் சாக்ரடீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மறியலில் கேரள அரசை கண்டித்தும், தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. நெல்லை மாவட்ட இந்து முன்னணி முன்னாள் தலைவர் பொன்னுசாமி, சேவா பாரதி தலைவர் ராமசாமி மற்றும் ஆலங்குளம், கீழப்பாவூர், தென்காசி பகுதியை சேர்ந்த அகில பாரத ஐயப்பா சேவா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மறியலில் கலந்து கொண்டனர்.

ஆலங்குளம் எஸ்ஐக்கள் பழனி, விஜயசண்முகநாதன், சுதாகரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட 64 பேரை கைது செய்தனர். தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.இதேபோல் சங்கரன்கோவிலில் அகில பாரத ஜயப்ப சேவா சமாஜம் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. தர்மசாஸ்தா பாதயாத்திரை குழு தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். ஜயப்பசேவா சங்கம் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். செங்குந்தர் முன்னேற்ற சங்கம் மாரிமுத்து மறியல் பேராட்டத்தை துவக்கி வைத்தார்.

சங்கரன்கோவில் முப்புடாதி அம்மன் கோயில் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட இவர்கள், சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி, சிவசு, ராமதுரை, செல்வகணேஷ், ஆர்எஸ்எஸ் மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன், பொறுப்பாளர் முத்துசாமி, பால்ராஜ், ரவிபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 41 பேரை சங்கரன்கோவில் டவுன் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: