×

திருவண்ணாமலையில் நீதிமன்றம், நீதிபதிகள் பெயரில் போலி ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்த 3 பேர் அதிரடி கைது

திருவண்ணாமலை, அக்.11: திருவண்ணாமலையில் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் பெயரில் போலி ரம்பர் ஸ்டாம்ப் தயாரித்த 3 பேரை மாவட்ட நீதிபதி கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
திருவண்ணாமலையில் உள்ள ரப்பர் ஸ்டாம்ப் தயாரிக்கும் கடைகளில், கோர்ட், நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் பெயரில் போலி ரப்பர் ஸ்டாம்ப்கள் தயாரிக்கப்பட்டு, முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு புகார் கிடைத்தது. அதன்பேரில், சம்பந்தப்பட்ட ரப்பர் ஸ்டாம்ப் கடை உரிமையாளர்களை கையும் களவுமாக பிடிக்க, மாவட்ட நீதிபதி மகிழேந்தி திட்டமிட்டார். அதன்படி, நீதிபதிகளின் பதவியை குறிப்பிடும் ரப்பர் ஸ்டாம்ப்களை செய்துத்தர ஆர்டர் கொடுக்க ஆட்களை அனுப்பினார்.

அதற்கான தொகையை பெற்றுக்கொண்ட கடை உரிமையாளர்கள், எந்தவித ஆவணங்களையும் சரிபார்க்காமல் ரப்பர் ஸ்டாம்ப்களை தயாரித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் கொடுத்தனர். எனவே, முறைகேடுகள் நடப்பதை உறுதி செய்த மாவட்ட நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் நேற்று மாலை திருவண்ணாமலை பெரியார் சிலை சந்திப்பு பகுதி, கட்டபொம்மன் தெருவில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது, அங்கிருந்த மூன்று கடைகளில் திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி, மாஜிஸ்திரேட், சார்பு நீதிபதி பெயரில் செய்து வைத்திருந்த ரப்பர் ஸ்டாம்புகளை கடைகளில் கைப்பற்றி அவர்களை கையும் களவுமாக பிடித்தார். அப்போது அவர் பெயரிலேயே இருந்த போலி ரப்பர் ஸ்டாம்ப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு துறை அலுவலகங்கள், உயர் அதிகாரிகளின் பெயரிலும் ரப்பர் ஸ்டாம்ப் தயாரிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கோர்ட் ஊழியர்கள் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர். நீதிபதியின் ஆய்வு தகவல் பரவியதும், அந்த பகுதியில் இருந்த அனைத்து ரப்பர் ஸ்டாம்ப் கடைக்காரர்களும் அவசர, அவசரமாக கடைகளை இழுத்து மூடிவிட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோர்ட் ரப்பர் ஸ்டாம்புகள், நீதிபதிகளின் பதவியை குறிப்பிடும் ரப்பர் ஸ்டாம்புகள் ஆகியவற்றை உரிய அனுமதி மற்றும் உத்தரவு கடிதம் இல்லாமல் தயாரிப்பது சட்டப்படி குற்றமாகும். அதேபோல், அரசு அதிகாரிகளின், அலுவலகங்களின் ரப்பர் ஸ்டாம்புகளை தயாரிக்கவும் முறையான அனுமதி கடிதம் சம்மந்தப்பட்டவர்களால் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சோதனை நடந்த 3 கடைகளிலும் அது போன்ற அனுமதி கடிதங்கள் எதுவும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட மூன்று கடைகளின் உரிமையாளர்களையும் கைது செய்ய மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, போலி ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்த, டெல்லிபாலாஜி(35), கதிரேசன்(49), அரிகிருஷ்ணன்(29) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : court ,Tiruvannamalai ,persons ,judges ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின்...