ஓமலூர் அருகே சிலை கடத்தல் கும்பலிடம் மீட்கப்பட்ட ₹25 கோடி மரகதலிங்கம்

ஓமலூர், செப்.21: சேலத்தில் இருந்து கோவைக்கு கடத்த முயன்ற போது, சிலை கடத்தல் தடுப்பு போலீசாரால் மீட்கப்பட்ட ₹25 கோடி மதிப்புள்ள 7 கிலோ மரகத லிங்கம், 18 மாதங்களுக்கு பிறகு ஓமலூர் நீதிமன்றத்தில் இருந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கும்பகோணம் தனி நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

சேலம் அருகே பால்பண்ணை என்ற இடத்தில் இருந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம், விலை உயர்ந்த மரகதலிங்கம் கடத்தி செல்லப்படுவதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்மணிக்கவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஐஜி தலைமையிலான போலீசார், சேலத்தில் இருந்து தாரமங்கலம் வழியாக காரில் சென்ற சிலை கடத்தல் கும்பலை விரட்டிச் சென்றனர். ஓமலூர் அருகே அழகுசமுத்திரம் என்ற இடத்தில் காரை வழிமறித்து, அதில் இருந்த ₹25 கோடி மதிப்புள்ள 7 கிலோ எடை கொண்ட மரகதலிங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, காரில் வந்த பால்பண்ணை பகுதியை சேர்ந்த வள்ளி (எ) மேரி, சீனிவாசன், மாரியப்பன், சரவணன், வைகுந்தம் பகுதியை சேர்ந்த குமரேசன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர், கைதான 5 பேரையும், சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் பறிமுதல் செய்த மரகத லிங்கத்தை ஓமலூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதனிடையே, 18 மாதங்களுக்கு பிறகு நேற்று, ஓமலூர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் மரகதலிங்க சிலை பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கும்பகோணத்தில் உள்ள தனி நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. சிலை கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் கொண்டு சென்றனர்.

Related Stories: