திருத்தணி முருகன் கோயிலில் நீதிபதிகள் திடீர் ஆய்வு: சொத்துக்கள், பணியாளர்கள் விவரம் குறித்து கணக்கெடுப்பு

சென்னை: திருத்தணி முருகன் கோயிலில் நீதிபதிகள் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது, கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் பணியாளர் உள்பட பல்வேறு விவரங்களை சேகரித்தனர். இந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்ட கோயில்களில் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், சுகாதார வசதிகள், கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் உட்பட பல்வேறு வசதிகள் குறித்து மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் பேரில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான கோயில்களில் நீதிபதிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன்  மாவட்டத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை  கட்டுப்பாட்டில்  உள்ள அனைத்து கோயில்களையும்  ஆய்வு செய்து வரும் 29ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். அதன்படி, திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன், திருத்தணி சப் கோர்ட் நீதிபதி கபீர் ஆகியோர் திடீரென திருத்தணி முருகன் கோயிலுக்கு நேற்று வந்தனர். அவர்களை கோயிலுக்குள் கோயில் ஊழியர்கள்  அழைத்துச் சென்றனர். கோயிலை சுற்றி நீதிபதிகள் ஆய்வு செய்தனர். மேலும் கோயில் அன்னதானக் கூடம், கழிவறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.  

பக்தர்களிடம் சுவாமி தரிசனம் செய்வதில் ஏதாவது குறைகள் உள்ளதா என நீதிபதிகள் கேட்டறிந்தனர். இதையடுத்து முருகன் கோயில் அலுவலகத்திற்கு வந்த நீதிபதிகள், ஊழியர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தனர்.  எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. திருத்தணி முருகன் கோயிலுடன் எத்தனை உப கோயில்கள் உள்ளன என்பது பற்றியும் கேட்டறிந்தனர். அப்போது, முருகன் கோயில் உள்பட 30 கோயில்கள் உள்ளன. இதில் 11 கோயில்களுக்கு மட்டுமே சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டது.

இதில் நஞ்சை 103 ஏக்கர், புஞ்சை 99 ஏக்கர் அளவுக்கு சொத்துக்களும் சென்னையில் 25 குடியிருப்புகளும், திருத்தணி நகரில் 4 வீட்டு மனைகளும் மற்றும் 144 கடைகளும், திருத்தணி கோயில் பராமரிப்பில் இருந்து வருவதாக கூறப்பட்டது பற்றி குறிப்பெடுத்துக் கொண்டனர். ஆய்வின்போது, நீதிபதிகளுடன் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் கோயில் ஊழியர்கள் உடனிருந்தனர்.

Related Stories: